ஒரு வணிகனின் கதை 20 | எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம் வேண்டும்! ஏன் தெரியுமா?

தீராத தாகம்! எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம்! உங்கள் வீட்டையல்ல, இந்த சமுதாயத்தையே மாற்றத் தேவையான அல்லது குறைந்தபட்சம் பலநூறு பேரின் வாழ்க்கையையே மாற்றத்தேவையான பணத்துக்கான ஆசை!
வேலையில் தனித்துவம்
வேலையில் தனித்துவம்புதிய தலைமுறை
Published on

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!’

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 20 - தாகம்

நான் ஒரு எம்மென்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எங்கள் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் ஒரு பெரிய பிரச்னை. கஸ்டமர் கம்ப்ளைண்ட்! மூன்று நாட்களாக சோதிப்புகள், விவாதங்கள், சந்திப்புகள், வறுத்தெடுப்புகள் என்று எங்கள் குழு மண்டை காய்ந்துகொண்டிருந்தது.

மூன்றாம் நாள் இரவு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எனது நண்பரும், ஜூனியருமான விஜயன் கேட்டார்,

“தெரியாமத்தான் கேட்கிறேன் கேகே, இந்த ரிசால்விங் பிராசஸே ஒரு பெரிய காமெடி மாதிரியில்ல?”

“விஜி, ரிஸால்விங் பிராசஸ் இல்ல, இந்த கம்ப்ளைண்டே பெரிய காமெடி மாதிரிதான் இருக்குது!”

“ஒருவேளை நம்ம மொத்த டிப்பார்ட்மெண்டே ஒரு காமெடிதானோ?”

”அதிலென்ன சந்தேகம்? சொல்லப்போனா நம்ம கம்பெனியே ஒரு காமெடிதான்!”

“அப்ப வீடு?”

“வீடு, நாம குடும்பம் நடத்துற லட்சணம், எல்லாமே காமெடியா இருக்குமோனு நிறையவாட்டி தோணியிருக்குமே உங்களுக்கு? எனக்கும் தோணியிருக்கு!”

“அப்ப லவ்வு?”

“அதுதான் இதெல்லாத்துக்கும் உச்சபட்ச காமெடி!”

இருவரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டோம். வேண்டுமென்றே, ஒரு கேளிக்கைக்காக இப்படித் தொடராக மாற்றி மாற்றி பில்டப் செய்து பேசிக்கொண்டோம் எனினும், நாங்கள் பேசியதில் ஏதோ ஒரு சதவீதம் உண்மையில்லாமலில்லை அல்லவா? அவ்வளவுதான், எல்லாவற்றையும் எளிமையாக அணுகும் மனது. அது நம்மைப் பாதுகாக்கும், நமது தோல்விகளிலிருந்தும், குறிப்பாக வெற்றிகளிலிருந்தும்!

சோம்பல் மனித இயல்புகளில் ஒன்று. கேளிக்கை மனிதத் தேவைகளுள் ஒன்று.

அய்யய்யோ! ஒரு தொழில் தொடங்குபவனுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களாக இந்தத் தொடரில் இத்தனை விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளனவே! அப்படியானால், எனக்கான நேரம் கிடைக்குமா?

நான் எனது விடுமுறை தினங்களில் சோம்பலாக கிடந்து உருளமுடியாதா?

எனக்கான சினிமா, இசை, பொழுதுபோக்கு இதெல்லாம் எங்கே, எப்போது கிடைக்கும்? கிடைக்குமா?

இது ஒரு டிரிக்கியான கேள்விதான். இங்கே நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களா இருக்கிறோம். எனக்குத் தேவைப்படுவது உங்களுக்கு தேவைப்படாமல் போகலாம். உங்கள் தேவை எனக்கற்றதாக இருக்கலாம்.இந்தக் கேள்விக்கு நானொரு பதில் சொன்னால், உங்கள் பதில் வேறாக இருக்கும்.

கமல்ஹாசனிடம் “நீங்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?” (அதாவது சோம்பலாக இருப்பீர்களா என்பதை டீஸண்ட் வடிவம்) என்று கேட்டபோது, அப்படி ஒரு பொழுது கிடைத்தால் ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருப்பேன், அல்லது தூங்கிக்கொண்டிருப்பேன் என்றார். அவர் சாப்பிடும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும்தான் ஓய்வாகக் கருதுகிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அவரது ஓய்வு, பொழுதுபோக்கு, வேலை எல்லாமே ஒன்றுதான். சினிமா!

(நான் சொல்வது அரசியலுக்கு முந்தைய கமல்ஹாசனை!) அதனால்தான் சினிமாவின் உட்கலைகள் அனைத்திலும் அறிவையும், ஆற்றலையும் அவரால் பெருக்கிக் கொள்ளமுடிந்திருக்கிறது. அவ்வாறே ஒவ்வொருவரும் அவரவர் வேலையை மனதுக்குப் பிடித்ததாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி தவிர்க்கவே முடியாததாகிவிடும். ஆனால், அப்படிச் செய்ய இயலுமா? வாழ்க்கைதான் ஒரு ஜிக்ஸா பஸிலைப் போல நம்மைக் கலைத்துப் போட்டிருக்கிறதே!

ஒரு கலைஞன், டாக்டராகியிருப்பான். ஒரு விவசாயி, என்ஜினியராகியிருப்பான். ஒரு வக்கீல், பாடகனாகியிருப்பான். கஷ்டம்தான்! நம்மை நாம் கண்டடைவதற்குள்ளாகவே பயணம் தொடங்கி, பாதியைத் தாண்டியிருப்போம். கோடுகளை பூராவும் அழித்துவிட்டு முதலில் இருந்து புரோட்டா சாப்பிடும் தெம்பு நம் எல்லோருக்குமே இருந்துவிடுவதில்லை.

விசயத்துக்கு வாருமய்யா என்கிறீர்களா? ஓய்வு கிடைக்குமா? கிடைக்காதா? உங்கள் தொழிலை நீங்கள் காதலித்தால், இந்தக் கேள்விக்கு இடமேயிருக்காது. பணத்தின் மீதான தாகம் உங்களுக்கிருந்தால், இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.

வேலையில் தனித்துவம்
ஒரு வணிகனின் கதை 17 | தொழிலில் அறம் ஏன் முக்கியம்?

சினிமாவில் வெற்றியாளர்கள் மிக மிகக் குறைவு, ஆனால் சினிமா சூதாட்டமல்ல! போலவே எந்தத் தொழிலிலும் வெற்றியாளர்கள் மிக மிகக் குறைவுதான், தொழிலும் சூதாட்டமல்ல! இவ்விரண்டும் சமயங்களில் சூதாட்டமாகப் பார்க்கப்படுகிறது, அது தவறு! இவ்விரண்டிலுமே சிந்தனை, செயல்பாடு, உழைப்பு, ஆக்கம் என படிநிலைகள் இருக்கின்றன. அதில், தவறுகள் நிகழும் போதுதான் தோல்வி ஏற்படுகிறது. தோல்வியை ஏற்பது சிரமமாகையால், இவற்றை சூதாட்டமென நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

அரசுப்பணியோ, தனியார் பணியோ எந்த ஒரு பணியிலும் உங்கள் ஊதியத்துக்கு ஒரு வரையறை உண்டு. ஆனால், தொழிலில் அந்த வரையறை இல்லை. அதுதான் மிகப்பெரிய வித்தியாசம். கையில் ஒன்றுமேயில்லாது தொடங்கியவர்கள், அவர்கள் வாழும் காலத்திலேயே லட்சம் கோடிகளில் தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியக் கதைகள் மிக ஏராளம்.

பணத்தின் மீதான தாகம் நம் எல்லோருக்குமே உண்டுதான். ஆனால், அது மேம்போக்கானது. நமக்கான சொந்த வீடு, கார், எதிர்காலத்துக்கான சேமிப்பு என நம் மனம் கணக்குப் போட்டுக்கொண்டிருக்குமானால் அது நான் குறிப்பிடும் தாகம் அல்ல!

model image
model imagefreepik
தீராத தாகம்! எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம்! உங்கள் வீட்டையல்ல, இந்த சமுதாயத்தையே மாற்றத் தேவையான அல்லது குறைந்தபட்சம் பலநூறு பேரின் வாழ்க்கையையே மாற்றத்தேவையான பணத்துக்கான ஆசை!

அது அப்படியாக இருந்தால்தான், உங்கள் சிந்தனை, செயல் எல்லாமே அதை நோக்கியதாக இருக்கும். இழப்பு என்பதற்கான வாய்ப்பே இருக்காது.

பணம் வருவதற்கான ஒவ்வொரு வழியையும் கண்டுகொள்வதும், அதைச் செப்பனிடுவதுமான இந்த விளையாட்டு நமக்கு, கமல்ஹாசனுக்கு சினிமா இருப்பதைப் போல மாறிவிடும். அங்கே, சோம்பலுக்கோ, கேளிக்கைக்கோ தேவைகள் இருப்பதில்லை!
வேலையில் தனித்துவம்
ஒரு வணிகனின் கதை 18 | தொழிலில் என்னென்ன மாதிரியான கேள்விகளெல்லாம் எழக்கூடும்?

இப்போது பெரும் கிணறுகளைக் யாரும் தோண்டுவதில்லை. புவிக்கடியிலிருந்து நீரை உறிஞ்சும் நவீன வழிகள் கிடைத்துவிட்டதால் அதை யாரும் செய்வதில்லை. ஆனால், எனது சிறு வயதுகளில், கிராமங்களில் கிணறுகள் தோண்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

கல்யாணம் செய்துபார், வீட்டை கட்டிப்பார் என்றொரு சொலவடை பிரபலமான ஒன்று. அதிலிடம்பெற்று பின்னர் காலப் போக்கில் நீங்கிய ஒன்றுதான் இந்த கிணற்றைத் தோண்டிப்பார். அத்தனைப் பெரிய சிரமமான பணி கிணறு தோண்டுவது. ஒரே ஓர் ஊற்றுக்கண்ணைக் கண்டடைவதுதான் அதன் உச்சம்! மொத்தக்கிணறும் நிரம்பித் ததும்பிவிடும்! அது போன்றதுதான், ஒவ்வொரு தொழிலுமே, பணம் வருவதற்கான ஊற்றுக்கண்ணைக் கண்டடைவது வரைக்கான பயணம் மிகச் சிரமமானதுதான்.

அதன்பின்னர் அங்கே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுமிருக்காது, நிரம்பித் ததும்பிவிடுவீர்கள்! பணத்தின் மீதான தாகமின்றி எந்தத் தொழிலும் சாத்தியமில்லை. ஆனால், அதை நோக்கிய அந்தப் பயணம், பணத்தை விடவும் முக்கியமானது.

இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொன்ன நிகழ்வினைப்போல தொழிலுக்குள்ளாகவே நிறைய கேளிக்கைகள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

நமது வேலையிலிருக்கும் கேளிக்கைகளைக் கண்டுகொண்டால், வேலையை கேளிக்கையான மனநிலையோடு அணுகினால் இன்னுமே நாம் அதைக் காதலிக்க வாய்ப்பு அதிகமாகும்!
காதலும், கவனமும் அதிகமாகுகையில் வெற்றிக்கு இன்னும் ஒரு அடி நெருக்கமாகச் செல்வோம்!

போலவே, தனியாக சினிமா, இசை, ஹாபி என அத்தனைக் கேளிக்கைகளுக்குமே இடமிருக்கிறது. இடமிருக்க வேண்டும். போலவே குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்குமான நேரத்தையும் தந்தாக வேண்டும்! எல்லாமே இங்கே நம் கைகளில்தான் இருக்கின்றன, அதுவும் எளிதானதுதான்!

வேலையில் தனித்துவம்
ஒரு வணிகனின் கதை 19 | அனைத்திலும் தொழில் வாய்ப்பைக் கண்டுகொள்ளும் பார்வை!

உங்கள் வாழ்க்கையை முழுமையடையச் செய்ய தேவையான பணத்தைப் போல பத்து மடங்கு பணத்தை நீங்கள் சம்பாதித்தால், மீதி ஒன்பது மடங்கு பணத்தை என்ன செய்வீர்கள்? அது ஏன்? யோசித்துச் சொல்லுங்கள்! மீண்டும் சந்திக்கிறேன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com