இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!
தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!
ஒரு ஆண், ஒரு பெண். அவர்கள் தம்பதியராய் இருக்கலாம். இரண்டு குழந்தைகள். அந்தப் பெண்ணின் தம்பி, காண்ட்ராக்டர் என மொத்தமாய் 6 பேர் வந்திருந்தனர். பெரிய குழுதான். ஓரிருவர் என்றால் விற்பனை சற்று எளிதாக அமையும். குழு எனில், ஒருவர் கரைக்கு இழுத்தால், இன்னொருவர் தண்ணீருக்கு இழுப்பார். அவர்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்து டைல்ஸை தேர்ந்தெடுப்பதும் சிரமம், சிட்டிக்குப் போகலாம் என்ற முடிவுக்கும் வந்துவிடுவார்கள். கவனமாகக் கையாள வேண்டும்.
வீட்டுக்குள் பதிக்கப்படும் டைல்ஸைப் பொருத்தவரை அந்த ஆண் விலையில் கவனமாக இருந்தார். அந்தப் பெண்ணோ வழுவழுப்பான உயர்ரக டைல்ஸை எடுக்க ஆர்வமாக இருந்தார், தனக்கு உதவியாக தன் தம்பியைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாய்க் கேட்க அனைவரையும் சமாளித்தபடி இருந்தேன். குழந்தைகள் பாத்ரூம் சுவருக்கு மீன் டிசைனைக் கேட்டன. அந்தப் பெண் பூ டிசைனை விரும்பினார். ஊடாக அந்தக் காண்ட்ராக்டரும் அவரது கருத்துகளைச் சொல்லி அவர்களை முடிவெடுக்க விடாமல் உழப்பிக் கொண்டிருந்தார். இடமே களேபரமாக ஆகிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் இன்னொரு மூவர் குழு உள்ளே வந்தது. அதிலும் இருவர் பெண்கள். முதல் குழுவுக்கு போதுமான தகவல்களைச் சொல்லிவிட்டதால், அவர்களை முத்துவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இரண்டாவது குழுவைக் கவனிக்கச் சென்றேன். ஒரே நேரத்தில் எனது கடையில் இரண்டு வாடிக்கையாளர்கள் வருவதெல்லாம் அரிது. அதுவும் குழுக்களாக!
இரண்டாவது குழுவில் இருந்த ஒரு பெண் ஏதோ அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதை சற்று நேரம் பேசியதிலேயே கண்டுகொண்டேன். இன்னொரு பெண் டிசைன்கள் பார்ப்பதில் கவனமாக இருக்க, இவரோ வேறு மாதிரியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இந்த டைல்ஸெல்லாம் என்ன மெட்டீரியல்ல பண்றாங்க?”
“எல்லாமே செராமிக்ஸ் மேடம்!”
“கொஞ்சம் விலை கம்மின்னு சொல்றீங்களே? இதென்ன ஐட்டம்?”
“போர்சலின் மேட்” (Porcelain Matt)
“அப்ப அது? ஹை ஸ்ட்ரெங்த்னு சொன்னீங்களே?”
“அது டபுள்சார்ஜ்டு விட்ரிஃபைடு!” (Double Charge Vitrified)
“போர்சலினுக்கும், விட்ரிஃபைடுக்கும் என்ன வித்தியாசம்?”
”விட்ரிஃபைடு ஸ்ட்ரெங்த் அதிகமானது. போர்சலின் அந்தளவுக்கு இருக்காது!”
”அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே! மெட்டீரியல்ல என்ன வித்தியாசம்னு கேட்டேன்!”
“ஓ, சாரி! இரண்டுமே செராமிக்தான்! ஆனா, அதிலேயே வேற வேற வகைகள் இருக்கு! அது மட்டுமில்லாம அதில் நேச்சுரல் க்ளே, லைம்ஸ்டோன், சிலிகா, க்வார்ட்ஸ்னு பல பொருட்கள் சேர்ந்திருக்குது. ஒவ்வொண்ணுத்தோட பர்சண்டேஜ் வித்தியாசப்படும் போதும், பிராசஸிங் மெத்தட்ஸ், டெம்பரேச்சர் இதெல்லாம் பொறுத்து வேற வேற மெட்டீரியல்ஸ் நமக்குக் கிடைக்குது. அதனாலதான் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான பிராப்பர்டீஸோட, வெவ்வேற விலையில் கிடைக்குது. நம்மோட தேவையைப் பொறுத்து, பட்ஜெட்டைப் பொறுத்து நாம செலக்ட் பண்ணிக்கணும்!”
”ம்ம்ம்!”
ஒரு சின்ன ஏற்பு அந்த ‘ம்ம்ம்’மில் இருந்தது. மகிழ்ச்சி!
“ஸ்ட்ரெங்த்ல வித்தியாசம் இருக்கும்னீங்களே? எந்தளவுக்குனு தெரியுமா?”
இந்தளவுக்கு யாரும் டீப்பாக யாரும் கேள்வி கேட்டதில்லை. ஒரு சின்ன ஆச்சரியம் ஏற்பட்டு ஓரிரு விநாடிகள் தயங்குவதற்குள்,
“தெரியலன்னா பரவால்ல, சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன்”
“இல்லல்ல, சொல்றேன்”
சின்னச்சிரிப்புடன் கேட்டேன்,
“மேடம், நீங்க மெக்கானிகல் எஞ்சினியரா?”
சின்னச்சிரிப்புடன் தலையசைத்தார்.
“ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்!”
“நினைச்சேன், டெக்னிகலா ரொம்ப டீப்பா கேள்வி கேட்டுகிட்டிருக்கீங்களே, அதான் யோசிச்சேன்”
மீண்டும் தொடர்ந்தேன்.
“டைல்ஸோட ஸ்ரெங்த்தை த்ரீ பாய்ண்ட் ஃப்ளெக்ஷுரல் ஸ்ட்ரெங்த் வைச்சிதான் மெஷர் பண்ணுவாங்க. போர்சலின் டைல்ஸ் 200 கேஜி/செண்டிமீட்டர்ஸ்கொயர் வரை இருக்கும். ஆனா, விட்ரிஃபைடு டைல்ஸ் அதோட இரண்டு மடங்கு அதிகமா, அதாவது 400 கேஜி/செண்டிமீட்டர்ஸ்கொயர் வரைக்கும் போகும்.”
“ஓ, Got it!”
“நானே என் கைப்பட செக் பண்ணியிருக்கேன்”
ஒரு சின்ன ஆச்சரியத்தோடு,
“எப்படி?”
“நான் பெரும்பாலும், வருஷத்துக்கு ஒரு தடவை மோர்பி போயிடுவேன். சப்ளையர்ஸ் சோர்ஸிங் பண்றதுக்காக! அப்படி ஒவ்வொரு தடவை போறப்பவும் எப்படியும் இரண்டு மூணு ஃபேக்டரி விசிட்டாவது பண்ணிடுவேன். அங்க போயி வேற என்ன வேலை எனக்கு? நான் ஏற்கனவே புரடக்ஷன் ஃபீல்டு ஆளு. அதனால பிராசஸிங் எப்படிப் பண்றாங்க, என்ன ரா மெட்டீரியல், குவாலிடி செக் எப்படிப் பண்றாங்க, பேக்கிங் அண்ட் ஸ்டோரிங் எப்படிப் பண்றாங்கனு முடிஞ்ச வரைக்கும் குடாய்ஞ்சு பாத்துட்டுதான் வருவேன்”
“குட்! அப்படித்தான் இருக்கணும்”
முகத்தில் திருப்தி ஏற்பட்டாலும், அவரது கேள்விகள் நிற்கவில்லை. சந்தையிலிருக்கும் சில விலையுயர்ந்த, பரவலாக அறியப்பட்ட சில பிராண்டுகளின் பெயரைச் சொல்லி,
“அந்த மாதிரி பெரிய பிராண்டுகளுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?”
“எல்லா எஞ்சினியரிங் பொருட்களைப் போலவேதான் டைல்ஸும்! அதோட பிராசஸிங் பாராமீட்டர்களைச் சரியா ஃபாலோ பண்றாங்களாங்கிறதுதான் கேள்வி. அதைப் பொருத்துதான் டைல்ஸோட தரமும் அமையும். பெரிய பிராண்டுகள் அதை உறுதி பண்ணுவாங்க. அதனாலதான் அவங்க விலை அதிகமா இருக்கும். மற்ற சின்ன பிராண்டுகளோ, பிராண்டிங் இல்லாதவங்களோ அப்படி பிராசஸிங் பாராமீட்டர்களை உறுதி செய்வாங்களாங்கிறது சந்தேகமே!
அதனால தரம் கொஞ்சம் கேள்விக்குறிதான்! விலையும் அதனால குறைவா இருக்கலாம்! என்னோட டைல்ஸ் எல்லாமே எல்லோருக்கும் தெரிஞ்ச பிராண்டா இல்லைனாலும், இதெல்லாமே ஏற்றுமதித் தரமிக்க நிறுவனங்களிடமிருந்து நான் வாங்குறேன். நானே நேர்ல போயி தெரிஞ்சிகிட்டு தரத்தை உறுதி செஞ்சுகிட்டது. பெரிய பிராண்டுகளுக்கு நிகரான தரமும் இருக்கும். விலையும் அதை ஒப்பிடும் போது சற்று குறைவாகவே இருக்கும்!”
”தேய்மானம் ஆகுறது, நாளடைவில் டிசைன்ஸ் அழிஞ்சு போறது இப்படில்லாம் ஆகுமா?”
“விட்ரிஃபைடு மாதிரி டைல்ஸ்ல அந்த பிரச்னை முற்றிலும் இருக்காது. போர்சலின் மாதிரி ஒருசில டைல்ஸ்ல அந்தப் பிரச்னை இருக்கலாம். ஆனாலும் வீடுகளுக்கு போடும்போது அதைப் பற்றி நாம நிறைய பயப்படத் தேவையில்லை. ஹோட்டல்கள், ஆஸ்பிடல்ஸ் மாதிரி மக்கள் நடமாட்டம் மிக அதிகமா இருக்குற இடங்களுக்குப் போடறப்பதான் அப்படி யோசிக்கணும். வீடுகளுக்கு போர்சலினை தாராளமாப் போடலாம். பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது”
முழுதும் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றுதான் தோன்றியது.
அப்போதுதான் இந்த இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. மூன்றாவதாக ஒரு இருவர் குழு கடைக்குள் வந்தது. ஒரே நேரத்தில் மூன்று கஸ்டமர் குழுக்கள் எனது கடைக்குள். நிச்சயமாக இன்றைக்கு மழை அடித்து ஊற்றத்தான் போகிறது. நல்ல வேளையாக அவர்கள் நமது ரெகுலர் வாடிக்கையாளர்களில் ஒருவர். அவர்களை இருக்கைகளில் அமரச்செய்துவிட்டு இரண்டாவது குழுவிடம் தொடர்ந்தேன்.
மூன்றாவது குழுவில் இருந்த தெரிந்த நண்பர், ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து பார்த்துவிட்டு, எழுந்து அருகில் வந்தார். நான் பார்த்துக்கொண்டிருந்த பெண்மணி தலையசைப்பிலேயே பார்க்கும்படி அனுமதி தந்தார்.
“இல்ல அண்ணாச்சி, நான் டைல்ஸ் பார்க்க வரலை. நேற்று எடுத்துட்டுப் போனோம்ல. அந்த டிசைனை எப்படி பதிக்கிறதுனு குழப்பம் வந்துடுச்சு. அதான் கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம். சொல்லிட்டிங்கனா கிளம்பிடுவோம்”
“அதிலென்ன பிரச்னை?”
“நீங்க டிஸ்ப்ளேயில வைச்சிருக்கீங்க பாருங்க, அதே போல வரலை! ஒரே மாதிரி டிசைன்ல சின்ன வித்தியாசத்தோட டைல்ஸ் வருமோ? மாத்திக் கீத்தி குடுத்திட்டீங்களா?”
சிரித்தபடி, “நிச்சயமா சின்னச்சின்ன வித்தியாசத்தோட, ஒரே டிசைன்ல வேற வேற கலர்லயெல்லாம் டைல்ஸ் வரும். ஆனா, நீங்க எடுத்துட்டுப் போன டிசைன் நம்ம கடையில் ஒண்ணுதான் இருக்கு! நீங்க பார்த்ததைத்தான் எடுத்துட்டுப் போயிருக்கீங்க!”
பேசிக்கொண்டே அந்த டைல்ஸ் இருந்த காட்சிப் பலகையின் அருகே சென்றோம்.
அது 1x1 அளவிலான டிஜிட்டல் பார்க்கிங் டைல்ஸ்.
“எனக்கு இது மாதிரி வரலையே? இந்தா பாருங்க ஃபோட்டோ எடுத்துட்டு வந்திருக்கேன்”
அவர் போனைக் காண்பிக்கும் முன்னரே, சிரித்தபடி,
“வேண்டாம், நீங்க எடுத்துட்டுப் போன டிசைன் இரண்டு விதமா பதிக்கக்கூடிய டிசைன். இருங்க நானே வைச்சிக் காண்பிக்கிறேன். கதிரு, இந்த டைல்ஸ்ல ஒரு 6 பீசு எடுத்துட்டு வா”
கதிர் எடுத்து வந்ததும், அதை தரையில் பரப்பி, இரண்டு விதமாக வைத்துக் காண்பித்ததும் ஒரு சின்ன ஆச்சரியம் மற்றும் சரியானதைத்தான் தந்திருக்கார் எனும் சின்ன நிம்மதி இரண்டும் அவர் முகத்தில் ஏற்பட்டது.
“எந்த டிசைன் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ, அப்படி பதிச்சுக்குங்க!”
“ஆங், அதானே பார்த்தேன்! இதை நேத்தே சொல்லியிருக்கலாம்ல!”
“மற்ற டிசைன்ஸ் இப்படிக் கிடையாது. இது ஒண்ணு மட்டும்தான் இப்படி. வழக்கமா ஞாபகமா சொல்லுவேன். ஏதோ அவசரத்துல மறந்துட்டேன் போலிருக்கு!”
“அதனால பரவாயில்லை, சரி வர்றோம்!”
என்றபடி கிளம்பினர் அவர்கள் இருவரும்.
“நல்லது!”
என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்த பெண்மணியிடம் வந்தேன். அதற்குள் அவர்களுக்குள்ளாக ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். பாத்ரூம் சுவருக்கான ஒரு டிசைனை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
”இதைக் கொடுங்க!”
என்று சொன்னதும், அவர்களுடன் வந்தவர் அளவுகளைச் சொல்ல ஆரம்பித்தார். நான் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி,
”இந்த டிசைனை நீங்க போர்ட்ல வைச்சிருக்க மாதிரிதான் பதிக்கணுமா? இல்லை, இப்ப இன்னொருத்தருக்குக் காண்பிச்சீங்களே, அப்படி மாத்தியும் பண்ணலாமா?”
“இல்லை மேடம். அப்படிப் பண்ணமுடியாது. எப்படி வைச்சலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனா நீங்க செலக்ட் பண்ணியிருக்கிறது பேட்டர்ன் டிசைன். அதில், இந்த டார்க் கலரை கீழே வைச்சிருக்கேன்ல, அதை மேலயும், லைட் கலரை கீழேயும், அல்லது ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறதுனு எப்படி வேணாலும் நமக்குப் பிடித்தாற்போல வைச்சுக்கலாம்”
போச்சு, பிடித்துக்கொண்டார்.
“எதுக்கும் வைச்சுக் காண்பியுங்களேன், போட்டோ எடுத்துக்குறேன்.”
அடுத்து கதிரும், நானும், சுமார் 15 நிமிடங்கள் செலவழித்து, அந்தக் குறிப்பிட்ட டைல்ஸை தரையில் விதவிதமாக வைத்துக் காண்பித்தோம். போட்டோக்கள் எடுத்துக்கொண்டார். அதுவரைக்கும் முதல் குழுவுடன் முத்து போராடிக்கொண்டுதான் இருந்தான். அவ்வப்போது அவர்கள், நாங்கள் இங்கே இவருக்கு டைல்ஸை விதவிதமாக வைத்து காண்பிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருவழியாக இரண்டாவது குழுவைத் திருப்திப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டு முதல் குழுவுக்கு வந்தேன். அவர்களும் இதற்குள் முடிவுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் அளவுகள் சொல்ல, கணக்கிடுதலை ஆரம்பித்தப் போதுதான் அந்தப் பெண் கேட்டார்,
“எங்களுக்கும் அது மாதிரி வைச்சுக் காண்பியுங்க!”
வந்த சிரிப்பை சிரிதும் காண்பித்துவிடாமல் அடக்கிக்கொண்டு,
“இல்லைங்க, அவங்க பேட்டர்ன் எடுத்தாங்க, அதனால மாத்தி மாத்தி வைச்சுப் பார்க்கலாம். நீங்க மீன் டிசைன் எடுத்திருக்கீங்க, கீழ கூழாங்கல், நடுவில் தண்ணியில மீன், மேல வானம் இப்படித்தான் நான் போர்டுல வைச்சிருக்க மாதிரிதான் வைக்க முடியும். மாத்தி வைக்க முடியாது”
அவருக்கு எனது திருப்தியாகவில்லை. ஏதோ நான் இன்னொரு வாடிக்கையாளருக்கு கொடுத்த சேவையை இவருக்குக் கொடுக்க மறுப்பதாக அவருக்கு ஒரு மனக்குறை. முகமே சரியில்லை! எழுந்தேன்.
“முத்து, ஒரு செட் இந்த டைல்ஸை எடுத்துக்கொண்டு வா!”
போர்டில் இருந்ததை அப்படியேதான் வைத்துக் காண்பித்தோம். அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி!
பொருட்களைப் பற்றி என்னென்ன மாதிரியான கேள்விகளெல்லாம் எழக்கூடும்? என்னென்ன சூழ்நிலைகளில், என்னென்ன விதமாகவெல்லாம் நமது பொருட்கள் பயன்படக்கூடியன? அதன் தயாரிப்பு எப்படி நிகழ்கிறது? அதன் தரம் எப்படி உறுதி செய்யப்படுகிறது? என்பது பற்றியெல்லாம் ஒரு விற்பனையாளன் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கவே இந்தப் பதிவு. அடுத்தும் சந்திக்கலாம்!