ஒரு வணிகனின் கதை 15 | ரகசியம் | அன்றாடம் ஆரோக்கியத்துக்கான முதலீட்டை செய்வது எப்படித்தெரியுமா?

ஒரு வணிகனின் கதை தொடரின் 15வது அத்தியாயமான இதில், தொழிலில் ஆரோக்கியம் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதை குறித்து காண்போம்.
வயிற்று வலி
வயிற்று வலிகோப்புப்படம்
Published on

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 15 - ரகசியம்

நாளை அதிகாலையில், கண்டெய்னர் வருகிறது. தூத்துக்குடியிலிருந்து லாஜிஸ்டிக் நிறுவன ஊழியர் தகவலைச் சொல்லிவிட்டார். காலை 5 மணிக்கெல்லாம் வந்துவிடும். ஏழு மணிக்காவது சுமையிறக்கும் தொழிலாளர்களை வரவழைத்து வேலையைத் தொடங்கியாக வேண்டும். ஏற்கனவே அவற்றை இறக்கிவைப்பதற்கான இடத்தைத் தயார் செய்திருந்தோம். அப்படியும் முத்துவையும், கதிரையும் அழைத்து எதை, எங்கே, எப்படி அடுக்கி வைக்க வேண்டும்? முன்பின்னாக இறக்க வேண்டியது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொரு தடவை பேசிக்கொண்டோம்.

முதல் முறை நேரடியாகக் கொள்முதல் செய்த போது நிறையவே சிரமப்பட்டிருந்தோம். ஒரு குறிப்பிட்ட டிசைனின் முதற்பகுதி கண்டெய்னரின் முன் பகுதியிலும், அதன் தொடர்ச்சி நடுவிலும், இறுதிப்பகுதி பின்புறமும் கிடந்தன. கிட்டத்தட்ட 15 டிசைன்கள், ஒவ்வொன்றிலும் மூன்று உட்பிரிவு. மொத்தம் 45 வகையான டைல்ஸ் பெட்டிகளை முன்பின்னாக கலைத்து ஏற்றி அனுப்பியிருந்தனர் உற்பத்தியாளர்கள்.

30 டன் எடை கொண்ட பொருட்கள். ஏழு சுமையிறக்கும் தொழிலாளர்கள். கிட்டத்தட்ட 6 மணி நேர வேலை. அவர்களுக்கோ பெட்டியிலில் உள்ள பெயர்கள், எண்களை வைத்துப் பிரித்துப் பார்க்க இயலவில்லை. ஒரு பெரிய குழப்பமே நேர்ந்துவிட்டது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்றும் சுமார் 20 டன் எடை கொண்ட பெட்டிகளைத்தான் சரியாக அடுக்க முடிந்தது.

மீதி 10 டன் எடைகொண்ட பெட்டிகளை மாற்றிக் கலைத்து இறக்கி அடுக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அவற்றை ஒழுங்குபடுத்த எங்கள் மூவருக்கும் ஒரு வாரமானது. அப்படியான முன்னனுபவமெல்லாம் இருந்ததால், நாளை எங்களுக்கு எந்தச் சிக்கலுமிருக்கப் போவதில்லை என்றுதான் முதலில் நினைத்திருந்தேன்.

வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு வண்டி வரக்கூடும். எப்போது வந்தாலும் ஓட்டுநர் கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு போன் செய்து சொல்லிவிடுவார். அலாரம் வைக்கத் தேவையில்லை. அதோடு அதற்கு அவசியமில்லாமல் இத்தகைய நாட்களில் அனிச்சையாகவே 4.30 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிடும். இன்றும் வந்தது. ஆனால், அது அனிச்சையாக அல்ல, வலியால்! வலது இடுப்புப் பகுதியில் ஒரு விநோதமான வலியால் விழித்துக்கொண்டேன்.

இதென்ன வலிக்கிறதா? வலிக்கவில்லையா? எந்த இடத்தில் வலிக்கிறது? படியேறுகையில் முட்டி வலிக்கிறது, சரி. முட்டி தேய்மானம் என்று புரிகிறது. எதிலாவது இடித்துக்கொண்டு நெற்றியில் புடைப்பாகி வலிக்கிறது, சரி. காயம் என புரிகிறது! ஆனால், இந்த வலி எங்கிருந்து வருகிறது? ஒட்டு மொத்தமாக அந்த ஏரியா முழுதுமே பரவலாக வலியிருந்தது. இல்லையில்லை, இது தாங்கக் கூடிய வலிதான். ம்ஹூம், முடியாது, தாங்க முடியாத வலி!

’ஆவ்.. மீரா’ என்று கத்தினேன்.

அருகிலிருந்த மீரா விழித்துக்கொண்டாள்.

“என்னாச்சுங்க?”

விபரத்தைச் சொன்னேன். அவளுக்குப் புரிந்துவிட்டது.

“இது கிட்னி ஸ்டோன் வலி மாதிரி இருக்குதுங்க! எங்க மாமாவுக்கு வந்தப்ப ஒரு நாள் பார்த்திருக்கேன்”

“கிட்னி ஸ்டோனா? அது ஒண்ணுதான் இப்ப குறைச்சல்!”

அந்த வலியிலும், சிரிக்க முயன்றேன்.

“உங்க திமிருக்கு எல்லாம் வரும்!” என்று திட்டிக்கொண்டே எழுந்தாள்.

“ஆஸ்பிடல் போலாமா?”

“இப்பவா? மணி அஞ்சி கூட ஆகல! லேசா வலிக்கிற மாதிரிதானே இருக்கு. சும்மாவே சரியாயிடுமோ?”

“கிழிக்கும்! முதல்ல, ப்ரஷ் பண்ணிட்டு வாங்க!”

காலைக்கடன் முடித்து, பல்துலக்கும் சம்பிரதாயத்தை முடிக்க மட்டும்தான் நேரமிருந்தது. குளிக்கக்கூட இல்லை. வலி நிமிடத்துக்கு நிமிடம் கூடி தாங்க முடியாததாகிவிட்டது.

வெட்டுக் காயங்கள் தரும் வலி வேறு, முட்டித் தேய்மான வலி வேறு, பல் சொத்தையால் நரம்புகளிலிருந்து எழும் வலி வேறு, வயிற்றுத் தசையிறுக்கத்தால் வரும் வலி வேறு! எல்லாம் வேறு வேறானது. என் நண்பன் செல்லா சொல்லுவான், ‘ஒவ்வொரு போதை வஸ்துவுக்கும் உரிய போதை என்பது வெவ்வேறு! மொத்தமாக அவற்றை போதை என்று வகைப்படுத்துவது அநியாயம்’ என்று! அப்படியானதுதான் வலிகளும்!

அதற்குள் சுபா எழுந்துவிட்டான்.

”என்னப்பா கத்திகிட்டு இருக்கீங்க?”

“போய் ஒரு ஆட்டோ கூட்டிகிட்டு வா தம்பி!”

“பைக்ல போயிடலாமாப்பா, பக்கத்துலதானே ஆஸ்பிடல்?”

“ஆஆவ்… சொன்னதைச் செய்யி!” சிரித்துக்கொண்டே கத்தினேன்.

விநோதமாகப் பார்த்துவிட்டு “ஓகே, ஓகே” என்றபடி விரைந்தான் வெளியே!

எந்த வலியிலும் சேராத வலியாக இந்த சிறுநீரகக்கல் வலி இருந்தது. மைக்ரோ விநாடியில் வலியில்லாதது போலவும், அடுத்த மைக்ரோ விநாடியில் மிகுந்த வலியையும் தந்து விளையாடிக் கொண்டிருந்தது. நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எப்படியாயினும் வலித்தது. சில வலிகளைத் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டு இருப்போம். சில வலிகளைப் பொறுக்க முடியாமல் உஸ்ஸென அரற்றிக்கொண்டிருப்போம்!

இதுவோ, ‘அப்பா, அம்மா!’ என்று வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது. கத்தும்போதே, ‘நாம் ஏன் இப்போது கத்திக்கொண்டிருக்கிறோம்’ என்று தோன்றியது. அடுத்த விநாடி யாரையாவது கட்டிப்பிடித்து மடியில் படுத்து அரற்ற வேண்டும் போலிருந்தது. நல்லவேளையாக மனைவி அருகிலிருக்கிறாள். அவளை உட்காரச்சொல்லி மடியில் படுத்து, கத்திக்கொண்டிருந்தேன். மீரா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.

வயிற்று வலி
ஒரு வணிகனின் கதை 14 | பேரம் பேசுவதை தவிர்க்க முடியாதுதான்... ஆனா அதுக்குன்னு....!

”என்னம்மா முழிச்சிகிட்டு இருக்கே, ஆ… ஒண்ணும் ஆகாதுனு ஏதாச்சும் ஆறுதல் சொல்லு, ஐயோ…”

இப்படியெல்லாம் எதிர்பார்க்கிற ஆளில்லை நான். அதுவும் கேட்டுப்பெறுகிற அளவுக்கு! இந்த வலி ஏதோ போதை போல செயல்படுகிறது. எனக்கே வியப்பாக இருக்கையில், ’என்னது ஆறுதல் சொல்லணுமா’ என்ற வியப்பிருக்காதா மீராவுக்கு? இப்படியாவது காதலித்தால்தான் உண்டு என்று நினைத்தாளோ என்னவோ, கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து,

“ஒண்ணும் ஆகாது செல்லம்! இப்ப அஞ்சி நிமிஷத்துல ஆஸ்பிடல் போயிடலாம், ஒரு ஊசி போட்டா எல்லாம் சரியாயிடும்!”

ஒரு குழந்தைக்கு ஆறுதல் சொல்வதைப் போல சொன்னாள். அதுதான் எனக்கும் தேவைப்பட்டது!

அடுத்த பத்தாவது நிமிடம், ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அகாலமாய் எழுப்பி, ஊசியைப் போட்டுக்கொண்டு அதற்கும் அடுத்த பத்தாவது நிமிடத்தில்தான் வலி நின்று நிஜ உலகத்துக்கே வந்தேன். அதுவரை கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஒண்ணும் ஆகாது செல்லம்’ என்று சொல்லிக்கொண்டிருந்த மீராவின் கைகளை உதறிவிட்டு, ‘என்ன உளறிக்கொண்டிருக்கிறாய்?’ என்பது போல பார்த்தேன். ‘தேவைதான் எனக்கு’ என்பது போலதலையிலடித்துக்கொண்டாள்.

இதை ஏன் இத்தனை விலாவரியாக விளக்குகிறேன் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எந்தச் சிக்கலுமே, அல்லது எந்த நோயுமே நமக்கு வந்தால் மட்டுமே அதன் ஆழ, அகலங்கள் புரிகின்றன.

நல்லவேளையாக மருத்துவத்தில் தேர்ந்த ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம், ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்த வலியிலிருந்து, பத்தே நிமிடத்தில் ஒரே ஒரு ஊசியினால் என்னைக் காத்தது நவீன மருத்துவம்தான். ஆனால், கிட்னி ஸ்டோனையே ஒரே ஊசியில் காணாமல் போக்கடித்து, மீண்டும் வராமல் செய்யும் மருத்துவ வசதி இன்னும் நமக்கு வரவில்லை. போலவே பல்வேறு நோய்களும்! என் தாயாரின் அல்சர் சுமார் ஒரு வருட காலத்துக்கு அவரை மட்டுமல்லாது, எங்கள் அனைவரையுமே பாடாய்ப் படுத்தி எடுத்ததை மறக்க முடியாது.

எதிர்பாராத நோய்களையோ, விபத்துகளையோ விட்டுவிடுங்கள்! ஆனால், நாற்பது வயதுக்குப் பிறகு சர்வநிச்சயம் என்று தெரிந்த சில நோய்கள் உள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, செரிமானப் பிரச்சினைகள், மூட்டு வலி, சிறுநீரகக்கல் போன்றன அவற்றில் சில! சிறுநீரகக்கல் பிரச்சினையைக் குறிப்பிட்டீர்கள், சற்று பயமாகத்தான் உள்ளது. ஆனால்,

'செரிமானக் கோளாறெல்லாம் ஒரு பிரச்சினையா? ஓர் ஈனோ எடுத்துக்கொண்டால் போகிறது' என்று நினைக்கிறீர்களா? ஹைஃபை சொல்லுங்கள்! நானும் உங்களைப் போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், அதை அனுபவிக்கும் வரை!

ஆனால், செரிமானக் கோளாறையும் இங்கே நான் விவரிக்கப்போவதில்லை. இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம் அதுவல்ல!

இந்தச் சிறிய நோய்களெல்லாம், நமது மனவலிமையை எந்தளவுக்குக் குறைக்கின்றன, நமது நேரத்தை எந்தளவுக்கு எடுத்துக்கொள்கின்றன, நமது பணத்தை எந்தளவுக்கு வீணடிக்கின்றன, நமது கவனத்தை எந்தளவுக்கு சிதறடிக்கின்றன என்பதற்காகவே இந்த ஒரு உதாரணத்தை விவரித்தேன். இந்த அத்தனையும், நமது தொழிலுக்காக நாம் தர வேண்டிய மிகவும் மதிப்பு வாய்ந்த விஷயங்களாகும்!

வயிற்று வலி
ஒரு வணிகனின் கதை 13 | ஒரு பதிலுக்காக காலவரையின்றி காத்திருக்க வைக்கும் கேள்விகளும் உண்டு!
இந்த இடத்தில், இன்னொன்றையும் குறிப்பிட்டுவிடுகிறேன். நாற்பதுக்குப் பிறகான நமது சென்சரி உறுப்புகளின் செயல்திறன் குறைவுபடுதல்! எளிமையான உதாரணம், வெள்ளெழுத்து!

நாற்பதைத் தாண்டிய ஏதாவது ஒரு வயதில், உங்கள் புத்தகங்களிலும், மொபைல் ஸ்க்ரீனிலும் உள்ள எழுத்துகள் முதலில் ஒரு லார்வாவைப் போல நெளியத்தொடங்கி, பிறகு இறக்கை முளைத்து ஒரு பட்டாம்பூச்சியைப் போல பறக்க ஆரம்பித்துவிடும்! எல்லோரும் இந்தக் குறைபாட்டை ஒத்துக்கொள்கிறோம், ஸ்டைலாக கண்ணாடி அணிந்துகொள்கிறோம்!

ஆனால், இப்போதுதான் யோசிக்கிறேன், கண்ணைப் போலத்தானே காது, மூக்கு, நாக்கின் செயல்பாடுகளும்! அவையும் அவற்றின் இயல்பிலிருந்து குறைந்துகொண்டுதானே இருக்கும்! நல்லவேளையாக அவற்றின் நூறு சதவீத செயல்திறன் நமக்கு அவசியப்படுவதில்லையோ நாம் பிழைத்தோமோ!

சரி, மேற்குறித்த நோய்களுக்கு வாருங்கள். மூட்டு வலி, சிறுநீரகக்கல், ரத்த அழுத்தக்குறைபாடு, நீரிழிவு, செரிமானப் பிரச்னை- இதெல்லாம் நாற்பதைக் கடந்தவர்களுக்கு நிச்சயம் வரக்கூடியவையே, ஒரே ஒரு கண்டிஷன் தவிர்த்து!

அதுதான் உடல் குறித்த அறிவு!

நமது உடல், உலோகத்தாலானது அல்ல! ஒரே ஒரு கவனச்சிதறலில், ஒரே ஒரு வாகன மோதலில், ஒரே ஒரு நொடியில் நாம் ஒரு கொசுவைப் போல இறந்துபோகக்கூடும்!

உலோகத்தினால் ஆன, ஒரு பைக்கையோ, காரையோ எடுத்துக்கொண்டாலும் அவற்றின் வாழ்நாளும் சில வருடங்களுக்குத்தான். அந்தச் சில வருடங்களில், எத்தனையோ தேய்மானங்களையும், குறைபாடுகளையும் நாம் விடாது சரி செய்துகொண்டேதான் இருக்கிறோம்! போலவே, முழு வளரிளம் பருவத்தைக் கடந்த மனிதன் அதன்பிறகு தேயுங்காலத்துக்குச் செல்கிறான். அப்போது ஒவ்வொன்றாக நோய்மைகளும், செயல்குறைபாடுகளும் நேர்கின்றன, நேரத்தான் செய்யும்! இது மிக இயல்பானது என்பதை உணர்ந்த மனிதனும், அவற்றை இயன்றவரை தள்ளிப் போடும் சூட்சுமங்களை அறிந்த மனிதனுமே உடல் குறித்து அறிந்தவர்கள்!

நல்ல வாசிப்பனுபவமும், மிக நீண்ட பணியனுபவமும் கொண்ட எனக்கு இந்த எளிய அறிவு, உண்மை… அதை நானே சந்தித்து அனுபவிக்கும் வரை உரைக்கவில்லை என்பதுதான் உண்மை! எனது முப்பதுகளில் நண்பர்களோடு இணைந்துகொண்டு ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களுக்கு, வருடம் ஒரு தடவை இரண்டு நாட்கள் தங்கச் செல்வது வழக்கம்.

அப்போது, இரவு ஒரு மணி வரை கூத்தடித்துவிட்டு சிலர் நன்கு தூங்கிக்கொண்டிருக்க, சிலரோ காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து ஷூக்களை மாட்டிக்கொண்டு கதை பேசியபடி சிலபல கிலோமீட்டர்கள் நடந்துவிட்டு வருவார்கள். தூங்குகிற குழுவில் நானிருப்பேன். என்னையும் அழைக்கும்போது, ‘போங்கடா போக்கத்த முட்டாள் சுகர் பேஷண்டுகளா’ என்று திட்டிவிட்டு படுத்திருக்கிறேன். சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். இப்போது தெரிகிறது, அங்கே முட்டாளாக இருந்தது யார் என்று!

வயிற்று வலி
ஒரு வணிகனின் கதை 12 | தொழிலில் ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

ஆனது ஆச்சு, இவற்றையெல்லாம் இயன்றவரை தள்ளிப்போடும் சூட்சுமம் என்னவென்று கேட்டால், அது உணவு, உறக்கம், உடற்பயிற்சி!

வயதுக்கேற்ப உங்கள் உணவைத் திருத்துங்கள், உறக்கத்தைத் திருத்துங்கள், உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்!

உணவையும், உறக்கத்தையும் கூகுள் பார்த்தாவது திருத்திக்கொள்கிறோம், அதென்ன உடற்பயிற்சி? அது எந்தக் கடையில் கிடைக்கும்? எத்தனைக் கிலோ வேண்டும்? என்று உங்களில் யாராவது கேட்டால் நீங்கள்தான் என் தோழன்!

20 வயதைத் தாண்டிய பிறகு, எனக்கான ஒரு நாள் என்பது உறக்கம் உட்பட 23 மணி நேரம் மட்டுமே! அந்த மீத 1 மணி நேரமென்பது எனது உடலுக்கானது! ஓட்டமோ, நடையோ, விளையாட்டோ அந்த ஒரு மணி நேரமென்பது, நாற்பது வயதுக்குப் பிறகான ஆரோக்கியத்துக்கான முதலீடு என்பதை எவன் உணர்ந்து வைத்திருக்கிறானோ, அவனே அறிவானவன்!

*

நீங்கள் ஏதேனும் தொழிலை ஆரம்பிக்கவிருக்கிறீர்களா? உங்கள் வயது என்ன? அந்த வயதுக்குரிய எத்தனை நோய்களை இதுவரை இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அல்லது உடற்பயிற்சிக்காக தவறாது நேரம் ஒதுக்குபவரா நீங்கள்?

புகை பிடிக்கும், மதுவருந்தும் பழக்கமிருக்கிறதா? பதில் சொல்லுங்கள். முன்னதாக உங்கள் செக் லிஸ்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் தொழிலில், உங்கள் ஆரோக்கியமே மிகப்பெரிய பங்காற்றப்போகிறது!

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com