இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!
தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!
ஒரு புல்லட்டில் வந்திறங்கிய இரண்டு பேர் கடைக்குள் நுழைந்தார்கள். முத்து அருகிலிருக்கும் வீட்டுக்கு போய்விட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே போயிருந்தான். கதிர் மட்டுமே இருந்தான். உடனே நான் எழுந்து வழக்கமான ’வணக்கம், வாங்க’ போன்ற வரவேற்புகளைத் தந்து டைல்ஸ் டிஸ்ப்ளேஸ் அருகே அழைத்து வந்து விளக்குகளைப் போட்டு, காற்றாடிகளை சுழலவிட்டேன்.
“சொல்லுங்க, என்ன பார்க்கணும்?”
“எங்களுக்கு நிறைய பார்க்கணும். உங்ககிட்ட என்னென்ன இருக்குனு சொல்லுங்க முதல்ல”
குரலில் ஒரு சின்ன அதிகாரம், தோரணை. நிச்சயமாக இவர் தனது வீட்டுக்காக டைல்ஸ் பார்க்க வந்த கஸ்டமர் இல்லை. ஏதாவது காண்ட்ராக்டராக இருக்கலாம். பேசுவதே ஒரு கலை. அதிலும் சேல்ஸில் இருக்கும் ஒருவன் அந்தக் கலையில் தேர்ந்திருக்க வேண்டும். ஒருவர் தனது பேச்சில் அதிகாரத்தை, முன்னுரிமையை முந்திக்கொண்டு எடுத்துக்கொண்டுவிட்டால், எதிராளி சற்று இறங்கிப் போய்த்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. சற்று இறங்கினேன்.
சிறிய புன்னகையோடு,
’இட்லி, தோசை, பூரி, பொங்கல்…’
எனும் தொனியில், இது பாத்ரூம் சுவருக்கு, இது தரைக்கு, இது இந்த சைஸ், இது இப்படி, இது வீட்டுக்குள் ஹாலுக்கானது, இந்த சைஸ், ரேட், இது முகப்புக்கானது என்று மனப்பாடமாக இருக்கும் விபரங்களை ஒப்புவிக்க ஆரம்பித்தேன். முடித்துவிட்டு அவர்களை ஏறிட்டேன்.
“வெரைட்டி கம்மியாக இருக்கே!”
நமது பலவீனத்தில் கையை வைக்கும் செயல். இதுவே ஒரு வீட்டுக்காரராக இருப்பின் அவரது நோக்கம், இன்னும் நான்கு டிசைன் பார்க்கலாமே எனும் சின்ன ஆசையாகத்தான் இருக்கும். அதுவே ஃபீல்டில் ரொம்ப காலமாக இருக்கும் காண்ட்ராக்டராக இருப்பின், அவர்களது நோக்கம் வேறு. ’நீ என்ன சுண்டைக்காய், என் விதிகளுக்குக் கட்டுப்பட்டு என்னோடு வியாபாரம் செய்ய நீ தயாரா’ என்பதை நிறுவுவதற்கான முன்னேற்பாடுகள் இவை. இவர்களை இன்னும் கவனமாகக் கையாளவேண்டும். மீண்டும் சின்னப் புன்னகையோடு,
“உங்களுக்குத் தெரியாததா சார்? நம்ம மார்க்கெட்டுக்கு தகுந்த மாதிரிதானே வைக்க முடியும்? இதே திருநெல்வேலி மாதிரி பெரிய மார்க்கெட்னா வேற விஷயம். அப்படியும் என்னால முடிஞ்ச வரைக்கும் பண்ணிகிட்டுதான் இருக்கேன். ஆரம்பத்துல நம்ம கடைக்கு வந்திருக்கீங்களானு தெரியல. ஒவ்வொண்ணுலயும் நாலு டிசைன் இருந்தாலே பெரிய விஷயம், இன்னிக்கு ஒவ்வொண்ணுலயும் பத்து டிசைன் வரைக்கும் வைச்சிருக்கேன். உங்களை மாதிரி ஆளுங்க சப்போர்ட் இருந்தாத்தான் இன்னும் பெரிசா பண்ணமுடியும்”
அவரிடம் ஒரு சின்னப்புன்னகை.
உங்க சப்போர்ட் இருந்தாத்தான் முடியும் என்ற வாக்கியத்தில் ஒரு புகழாரம்! இது சின்ன மார்க்கெட், நான் ஒரு சின்ன ஆளு என்பதான ஒப்புக் கொடுப்புக்கு கிடைத்த பலன்தான் அந்தப் புன்னகை!
“சார், நம்ம கடையில் உங்களைப் பாத்ததேயில்லையே, உங்க வீட்டுக்கு பார்க்குறீங்களா? அல்லது கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல…”
இது தெரிந்தே போட்டு வாங்கும் முயற்சிதான். ஆனாலும் வேலை செய்தது. நான் முடிக்கும் முன்னமே, பக்கத்திலிருந்த ஆள் பேச்சையெடுத்தான். அல்லக்கையாக இருக்கலாம்.
“சார், முத்துராஜ்! வீரவநல்லூர் காண்ட்ராக்டர்.”
அவன் குரலில் ஒரு பெருமிதம் இருந்தது. அவரது முகத்திலும்! அவர் ஒரு மிகப்பெரிய காண்ட்ராக்டர் என்று நான் கேள்விப்பட்டதில்லை எனினும், வீரவநல்லூர் முத்துராஜ் என்ற பெயர் என் காதில் விழுந்திருக்கிறது என்ற வகையில் அவர் ஒரு பெரிய காண்ட்டாக்டராகத்தான் இருக்கக்கூடும்.
மற்றபடி அவர் பெரிய காண்ட்ராக்டரா, சின்ன காண்ட்ராக்டரா என்பது இங்கு முக்கியமில்லை. இன்னொரு ரெகுலர் கஸ்டமரைத் தேற்றுவதற்கான வாய்ப்பு, விட்டுவிடக்கூடாது. குரலில் வியப்பை ஏற்றிக்கொண்டு,
”சார், வாங்க! உக்காருங்க முதல்ல! இந்தக் கடை ஆரம்பிச்சி நாலு வருசமாகுது. இப்பதான் உங்களுக்கு என் கடைக்கு வழி தெரிஞ்சுதா?”
என்று நான் உரிமையோடு பேச ஆரம்பிக்கவும், புன்னகையோடு வந்தமர்ந்தார்கள். நானும் என் இருக்கையில் உட்கார்ந்தேன்.
“கதிர், 3 டீ சொல்லு. சார், டீ சாப்பிடுவீங்கள்ல!”
“அதெல்லாம் வேண்டாம், இப்பதான் குடிச்சோம்!”
“அட, இருக்கட்டும் சார், முதல் தடவை வந்திருக்கீங்க, அப்ப காஃபி சொல்லவா?”
“சரி சொல்லுங்க, சுகர் கம்மியா!”
“உங்களுக்குண்ணே?”
“எனக்கு நார்மலா”
“கதிர், 3 காஃபி. ரெண்டு சுகர் கம்மியா!”
“உங்களுக்கும் சுகரா?”
“உங்களுக்குமா?”
“அதையேன் கேக்குறீங்க சார், நாலைஞ்சு வருசமா!”
“எனக்கு இப்ப சமீபமாத்தான். எல்லாம் ஸ்ட்ரெஸ்தான் காரணம். தொழில் பண்றவங்களுக்கு எல்லாப்பக்கமும் ஸ்ட்ரெஸ்தானே. இதெல்லாம் வராம இருந்தாத்தான் ஆச்சரியம்? இல்லையா சார்?”
ஒரு இனிப்பான நட்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். அதோடு இது தொடக்க பேச்சுவார்த்தையில் அவர் பக்கமிருந்த டாமினேஷனை என் பக்கம் வரவழைத்துக் கொள்வதற்கான முயற்சி. இனி, நமது சிறப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவர் அதைக் கேட்டுக்கொள்ளும் நிலைமையில் இருக்க வேண்டும்.
”சரியா சொன்னீங்க. உங்களுக்கு எவ்வளவு?”
“என்னது எவ்வளவு?”
“சுகர்தான்!”
“காலைல வெறும் வயித்துல பாத்தா 110 காமிக்கும் சார். முதல் நாள் அரிசி, கோதுமை என எதுவும் எடுக்காம என்ன கழுதைய தின்னாலும் அதுவேதான் சார் காமிக்கும்”
“அதை விடுங்க, ஆவரேஜ் எவ்வளவு?”
“6.1”
”6.1க்கா இப்படி பில்டப் பண்றீங்க, எனக்கெல்லாம் 8.6 இருக்குது சார்”
“அச்சச்சோ! மாத்திரை போடுறீங்களா?”
“வேற வழி?”
“அது சார், காலைல 6 மணிக்கு எழுந்து ஒரு லிட்டர் தண்ணிய லைட்டா சுட வைச்சி ஒரு கால் லெமனை அதில புழிஞ்சி குடிச்சிட்டு, ஒரு அஞ்சி கிமீ நடந்தீங்கனு வைச்சிக்குங்க, சுகர் கப்புனு இறங்கிரும்!”
“அஞ்சி கிலோமீட்டரா? ஏற்கனவே முட்டிவலி வேற இருக்கு, இதுல அஞ்சி கிமீ எப்படி நடக்குறது? அதெல்லாம் ஆவுற கதையா?”
பர்சனல் விஷயங்களில் ரொம்ப ஓவராகப் போகக்கூடாது. அளவோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அவர் சிரித்தபடி பதில் சொல்ல, நானும் சிரித்தபடி டாப்பிக்கை மாற்றினேன்.
“சொல்லுங்க சார், இப்ப என்ன பார்க்க வந்தீங்க? என்ன வேணும்? எத்தனை சதுரடி? எப்ப எடுக்கணும்?”
“எனக்கு அடுத்த வாரம்தான் தேவைப்படும். லோக்கல்ல ஒரு பெரிய வீடு. ரெண்டாயிரம் சதுரடி தேவைப்படும். அதான் ஒரு எட்டுப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்”
”வழக்கமா எங்க சார் எடுப்பீங்க?”
”வழக்கமா திருநெல்வேலிக்குப் போயிடுவேன்”
“சரி சார், இந்த வாட்டி நம்மகிட்டதான் எடுக்குறீங்க, தரைக்கு மேட், 32க்கு எடுத்துக்குங்க. டிசினா 50, 2x4 ஜிவிடினாலும் அதே 50. 18x12 சுவர் டைல்ஸ்க்கு 30. எல்லாம் பர்ஸ்ட் கிளாஸ் எக்ஸ்போர்ட் குவாலிடி, 100% வாட்டர்ப்ரூஃப்!”
“மேட்டு ஓகே, மற்றதெல்லாம் அதிகமா இருக்கே!”
“என்னது சார்? எந்த ஐட்டம்னு சொல்லுங்க, யாரை விடனு சொல்லுங்க, தெரிஞ்சிக்கிறேன்”
“திருநெல்வேலிக்கு ஓகே, ஆனா விகேபுரம் தருண்னு ஒரு பார்ட்டி, எல்லாம் நீங்க சொன்னதை விட 2 ரூபா கம்மியா இருக்கும்”
“விகேபுரம் தருணா? இப்படி புதுசு புதுசா யாராச்சும் வந்துகிட்டே இருப்பாங்க, சார். என்ன குவாலிடியில, எப்படி கம்பெனியிலருந்து எடுத்துகிட்டு வர்றாங்கனே தெரியாது. ஆனா, நம்மகிட்ட எந்த பிரச்சினையும் இருக்காது. இது வரை ஒரு கம்ப்ளைண்டு வந்தது கிடையாது. நான் மோர்பியிலிருந்து டைரக்ட் பர்சேஸ் பண்ணிகிட்டிருக்கேன் சார்.
கடை ஆரம்பிக்கும் போது நானும் திருநெல்வேலியிலிருந்து ஸ்டாக்கிஸ்ட்டிடம் வாங்கிக் கொண்டிருந்தவன்தான். ஆனால், அந்த முறையில் வியாபாரம் செய்வது இந்தத் தொழிலில் இருக்கும் கடுமையான போட்டிக்கு சாத்தியமில்லை என்று தெரியவந்ததும், மோர்பி போய் நல்ல தரமான எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்களை நேரில் பார்த்து, சப்ளையர் பேஸ் கிரியேட் பண்ணியிருக்கேன். அவர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வதால்தான் திருநெல்வேலியை விட குறைவாகத் தருவது சாத்தியமாகியிருக்கிறது”
“இருந்தாலும் கஸ்டமர்கிட்ட இதையா சொல்லமுடியும்? எவன் குவாலிடியை பாக்குறான்? ரேட்டுதான் பெரிய பிரச்சினையா இருக்கு. இன்னும் பெட்டரா எவ்வளவுக்குப் பண்ணித் தருவீங்க?”
“நீங்க மாசம் எவ்வளவுக்கு எடுப்பீங்க சார்?”
“எப்படியும் ரெண்டு வீடு முடிப்போம், மினிமம் 1 லட்சமாச்சும் வரும்!”
“ஏற்கனவே இது பெஸ்ட் ரேட்தான். எல்லா ரெகுலர் கஸ்டமர்ஸ்க்கும் இதான் பண்றேன். நீங்க மந்த்லி மினிமம் பர்சேஸ் கமிட்மெண்ட் குடுத்தா, எல்லாத்திலும் இன்னொரு 2 ரூபா கம்மி பண்ணிக்கலாம் சார். அதான் ஃபைனல்!”
“அப்ப சரி!”
எழுந்தனர்.
“ரொம்ப நல்லது சார், நிச்சயமா வாங்க”
கையெல்லாம் கொடுத்துவிட்டுப் போனார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் இந்தப் பக்கம் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இரண்டு தடவை போன் பண்ணிப்பார்த்தேன். எடுக்கும் போது வருகிறேன் சார் என்றார். ஒரு தடவை, இங்கு இன்னொரு கஸ்டமரைப் பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாமே என்று பொய்சொல்லிக்கொண்டு நேரிலேயே போய் பார்த்துவிட்டும் வந்துவிட்டேன். கதைக்கு ஆகவில்லை!
அவருக்கு அந்த வேலை நிஜமாகவே தள்ளிப்போயிருக்குமோ? அப்படி இருந்தாலும், இரண்டு மாதமாகவா அவருக்கு வேறு வேலைகள் நடக்காமல் இருக்கும்? நாம்தான் அவரைச் சரியாக இம்ப்ரெஸ் செய்யவில்லையோ? அல்லது நமது விலை விகேபுரத்துக்காரனை விட நிஜமாகவே அதிகமாகத்தான் இருக்கிறதோ? விகேபுரத்துக்கே போயிருப்பாரோ?
சில சமயங்களில் கேள்விகள் மட்டும்தான் நம் முன் இருக்கும்! பதிலுக்காகக் காலவரையின்றி காத்திருக்க வேண்டும்!
*
முத்துராஜை எந்த விதத்தில் நான் கோட்டை விட்டதாக நீங்கள் கருதுகிறீர்கள்? அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்? பதில் தாருங்கள். மீண்டும் இன்னொரு அத்தியாயத்தில் சந்திப்போம்.
*