ஒரு வணிகனின் கதை 12 | தொழிலில் ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

ஒரு வணிகனின் கதையின் 12 வது அத்தியாயமான இதில், தொழிலில் ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம்
ஒரு வணிகனின் கதை 12
ஒரு வணிகனின் கதை 12முகநூல்
Published on

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 12 - ஆளுகை

பிரபு ஃபவுண்டேஷன் அஜித் வந்திருந்தார். “அண்ணே, ஒரு 300 சதுரடி 2x4 ஜிவிடி டைல்ஸ் வேணும். இந்தா இருக்குல்ல இந்த கிளாஸி கிரே இருக்கா?”

“எடுத்துக்குங்க. எப்ப வேணும்?”

”சாய்ங்காலம் 4 மணிக்கு வண்டி வரும், ஏத்திவிட்ருங்க!”

“ரூ.16000” சிரித்துக்கொண்டே QR கோடை ஸ்கேன் பண்ணிப் பணத்தை அனுப்பினார்.

“கணக்குல கரெக்டா இருப்பீங்களே! உங்களை மாதிரியே நானும் கஸ்டமர்ஸ்கிட்ட இருக்கணும்னு நினைக்கிறேன். முடியலையே, நம்ம தலையைப் பார்த்தாலே முளகா அரைக்கணும்னு தோணிடுமோ என்னமோ, அவுட்ஸ்டாண்டிங் மட்டுமே நாலைஞ்சு லட்சம் கிடக்குதுண்ணே”

“யாரு? என்னை மாதிரி? நல்ல ஆளைப் பாத்தீங்க போங்க!”

“உங்களுக்கென்னண்ணே?”

“அடப்போங்க தம்பி, உங்களுக்கு நாலைஞ்சுன்னா என் கெப்பாசிட்டிக்கு 1 லட்சம். வாங்கும் போது மட்டையா மடங்கி வாங்கிட்டுப் போயிடுறானுக. பணத்தைத் திருப்பிக் கேட்டா போலீசுக்குப் போறானுக, ஏதோ நாம பணம் வாங்கிட்டு ஏமாத்துன மாதிரி” வாய்விட்டுச் சிரித்த அஜித்,

“என்னண்ணே சொல்றீங்க, போலீஸ் கேஸா? அது எப்ப நடந்துச்சு?”

“போன மாசம்தான். அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க!” அடக்க முடியாம சிரித்த அஜித் சேரில் உட்கார்ந்தபடி,

“என்ன கூத்து இது? என்ன நினைச்சுகிட்டிருக்கானுக? நம்பளை எல்லாம் பாத்தா மூஞ்சியிலயே இளிச்சவாயினு எழுதி ஒட்டிருக்குனு தெரிஞ்சிடுமோ!”

“என்னத்த சொல்ல?”

“அப்புறம் அண்ணே, உங்களை இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். சிட்டியில ஒரு பார்ட்டிக்கு ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க் பேச்சு வார்த்தை போய்கிட்டிருக்கு. அவங்க ஃபுல்லா ஜிஎஸ்டி பில்லிங் பண்ணித்தரணும்ங்கிறாங்க.”

”பண்ணுங்க, ஏற்கனவே நான் B2C ஜிஎஸ்டி பில்லுதானே உங்களுக்குத் தர்றேன். உங்க ஜிஎஸ்டி நம்பர் கொடுத்தா B2B பில்லே தந்துடுவேன். அதே மாதிரி எல்லாவன்கிட்டயும் கேளுங்க. நீங்களும் சிக்கலில்லாம பில் போட்டுறலாம்”

“அதுக்கு நான் முதல்ல, ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணனுமே!”

“யோவ், என்ன இன்னுமா பண்ணாம இருக்கீங்க? எத்தனை வருசமா பிசினஸ் பண்ணிகிட்டு இருக்கீங்க?”

“அதாச்சு 2-3 வருசம்!”

“சுத்தம்!”

“இங்க அவனவன் 20- 30 வருசமா ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணாம தொழில் பண்ணிகிட்டிருக்கானுக, நீங்க வேற!”

”அது சரி. ஏதாச்சும் டிபார்ட்மெண்ட்லருந்து கேள்வி வந்தா எப்படி சமாளிக்கிறது? அதோட எல்லாப் பணமும் உங்க சேவிங்ஸ் அகவுண்ட்லேயே டிரான்ஸாக்‌ஷன் ஆனா, இன்கம்டாக்ஸ் எப்படி ஃபைல் பண்ணுவீங்க? அதுவாவது போகுது. மத்தவனுக இங்கனக்குள்ளயே கிராமத்துல குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டிகிட்டு இருப்பானுக. அவங்களுக்குத் தேவையில்ல, நீங்க இப்ப சிட்டியில் பெரிய பிராஜக்ட்ஸ் பண்ண டிரை பண்ணிகிட்டு இருக்கீங்க, அப்படி பெரிய லெவல்ல வளரணும்னா இதெல்லாம் பண்ணினாத்தானே முடியும்!”

“அதனாலத்தான் உங்களைக் கேக்குறேன், வேற என்னென்ன சிக்கல் வரும்? எவ்வளவு டேக்ஸ் கட்ட வேண்டியிருக்கும்?”

”நல்ல கேள்வி கேட்டீங்க! இப்பதான் ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் பண்ணுங்க, ஒழுங்கா மாசாமாசம் ஃபைல் பண்ணுங்கனு சொல்லிகிட்டிருந்தேன். ஆனா, இப்ப விவரத்தைக் கேட்டுட்டு தலைதெறிச்சி ஓடிறாதீங்க!” என்றேன்.

அவரும் சிரித்தபடி, “சொல்லுங்க” ”இப்ப என் கடைக்கு என்ன இன்வெஸ்மெண்ட் ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க?” என்றார்

“தெரியலையே!”

ஒரு வணிகனின் கதை 12
ஒரு வணிகனின் கதை - 11 | தோற்றம் & பேச்சைக் கொண்டு வாடிக்கையாளர்களை கணிப்பது சரியா? அப்படி முடியுமா?

“சரி, அதை விடுங்க! கடையோட ஆபரேடிங் காஸ்ட் என்னவாயிருக்கும்னு நினைக்கிறீங்க?”

”இன்வெஸ்ட்மெண்டுக்கான இண்ட்ரஸ்ட் இல்லாம ஒரு அம்தாயிரம் ஆகுமா?”

“பிரில்லியண்ட்! நியர் பர்ஃபெக்ட்” புன்னகைத்தார்.

“ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் இப்போதைக்கு நான் எதிர்பார்க்கலை. ஆனா அதுல கொஞ்சத்துக்கு வட்டி கட்டிக்கிட்டிருக்கேன்கிறது வேற விஷயம். என்னோட சம்பளம் மினிமமா எடுத்துகிட்டிருக்கேன். இந்த ரெண்டையும் சேர்க்கலைன்னா நீங்க சொன்ன 50 ஆயிரம் பர்பெக்டா வரும். அதையும் சேர்த்தா 80னு வைச்சுக்குங்களேன். என்னோட லாப சதவீதத்துக்கு 80 ஆயிரம் வேணும்னா குறைஞ்சது, மாசாமாசம் 5 லட்சத்துக்கு விற்கணும். ஆனா நாலை தாண்டுறதுக்கே தலைகீழா நின்னு தண்ணிகுடிக்க வேண்டியதா இருக்கு! நான்லாம் என்னிக்கு 6 லட்சத்தைத் தாண்டி ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்டை எடுக்குறதுனுதான் தெரியலை!” பெருமூச்சு வெளியானது.

அஜித் ஆறுதலாக, “அதெல்லாம் சீக்கிரமா பண்ணிடலாம்ண்ணே, கவலைப்படாதீங்க. சரி, அதை விட்டுட்டு நான் கேட்ட விஷயத்துக்கு வாங்க!”

மனதைத் தேற்றிக்கொண்டு, “அதுக்குதான்யா வர்றேன், இந்த பேஸ் புரிஞ்சாதானே ஜிஎஸ்டில உள்ள சிக்கல் புரியும், அதனால இதெல்லாம் சொன்னேன். இல்லைனா எந்த பைத்தியக்காரனாவது இப்படி ஓபனா எல்லாத்தையும் சொல்லுவானா?”

”ம்ம்” என்றார் சிரித்தபடி.

ஒரு வணிகனின் கதை 12
ஒரு வணிகனின் கதை 10 | காரியம் நடக்கும் வரை இனிமை... பிறகு கடுமை... எப்படி கையாள்வது இவர்களை?

“அந்த ஆபரேசன் காஸ்ட்ல ரொம்ப மேஜரான செலவே சம்பளம்தான். மூணு பேருக்கு தலா 12000 வீதம், 36000. ஆனா, ஜிஎஸ்டி மட்டுமே 40000 கிட்ட கட்டுறேன்!” ஒரு சின்ன அதிர்ச்சிக்குள் போனார் அஜித்.

“என்னண்ணே சொல்றீங்க? இன்புட் கிரெடிட்னெல்லாம் சொல்றாங்களே? அதெல்லாம் இருக்கும்ல?”

“ஆங், அப்ப பேஸிக்ஸ் தெரிஞ்சிகிட்டுதான் வந்திருக்கீங்க? அப்ப விவரிக்கிறது ஈஸிதான். அதாவது நாம எதுக்கு ஜிஎஸ்டி கட்டுறோம்? நாம சம்பாதிக்கிற லாபத்துக்குதான்… இல்லையா? இப்ப நம்ம பொருளையே உதாரணமா எடுத்துக்குவோம். கட்டுமானப் பொருளுக்கு 18% ஜிஎஸ்டி. 100 ரூபா பொருளை நான் சப்ளையர்கிட்டயிருந்து 118 ரூபா கொடுத்து வாங்குறேன். நான் அந்தப் பொருளை 20% பிராஃபிட்ல சேல் பண்றேன்னு வைச்சிக்குவோம். 120 +18% ஜிஎஸ்டி 21.6. மொத்தம் ரூ.141.6க்கு சேல் பண்றேன். அதுல, அல்ரெடி நான் கட்டின 18 ரூபா இன்புட் டாக்ஸ் கிரெடிட். அதை கழிச்சிட்டு ரூ.3.60 கட்டினா போதும். சரியா?”

“கரெக்ட்!”

“இப்ப 3 லட்ச ரூபா பொருளை ரூ.54000 டாக்ஸ் கட்டி நான் வாங்கியிருப்பேன். அதை நான் 20% லாபத்துக்கு வித்தா எனக்கு கிடைக்கிற கட்டின இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை கழிச்சிட்டுப் பாத்தா 10800 ரூபா வருது. இல்லையா?”

“ஆமா?”

“இது என் கடைக்கு சின்ன அமவுண்டா? பெரிய அமவுண்டா?”

“கொஞ்சம் பெரிசு மாதிரிதான் தெரியுது”

“கிட்டத்தட்ட ஒரு எம்ப்ளாயீ சம்பளம்! நான் இங்க என் சம்பளத்துக்கே வழியில்லாம உக்காந்திருக்கேன். ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் எத்தனை கிமீ தூரத்துல இருக்குனு தெரியல. இந்த அழகுல கவர்மெண்டுக்கு மாசாமாசம் ஓராளு சம்பளம் குடுத்துகிட்டிருக்கேன்”

“சரிதான். ஆனா 40 ஆயிரம்னு முன்னாடி சொன்னீங்க?”

“அது பிராக்டிகலா இருக்குற சிக்கல்! அதென்னன்னா, இப்ப ஒரே கன்சைன்மெண்டா ஒரு 15 லட்சத்துக்கு மெட்டீரியல் வாங்குறேனு வைச்சிக்குங்க. இன்புட் கிரெடிட் மட்டும் ஒரு ரெண்டேமுக்கா லட்சம் கிடைக்கும். ஒரு மூணு, நாலு மாசத்துக்கு நாம பண்ற சேலுக்கெல்லாம் இன்புட் கழிச்சி ஒண்ணுமே கட்டவேண்டியிருக்காது. மகிழ்ச்சியா ஃபைல் பண்ணிகிட்டே இருப்பீங்க. அஞ்சாவது மாசத்திலிருந்து கிரெடிட் 0 ஆகி, மொத்த சேலுக்கும் டேக்ஸ் கட்டவேண்டியிருக்கும். அப்பப் புடிக்கும் பாருங்க கழுத்தை! மூச்சு முட்டிடும். நாம நமக்காக கஷ்டப்பட்டு வேலை பாக்குறோமா? இல்லை கவர்மெண்டுக்காக வேலை பாக்குறோமானு தோணிடும்”

“இது பிராக்டிகல் இஷ்யூதானே, நாமதான் தயாரா இருக்கணும். மூணு நாலு மாசமா கட்டாத பணத்தையெல்லாம் இதுக்குன்னே பிளான் பண்ணி சேர்த்து வைக்கணும். அதுக்கு கவர்மெண்ட் என்ன செய்யும்?”

ஒரு வணிகனின் கதை 12
ஒரு வணிகனின் கதை 7 | ‘லோன் வேணுமா? உங்களுக்குதான் இந்த செய்தி!’

“அது சரி, நீங்கதான் ஜிஎஸ்டி ஃபைல் பண்றதுக்கு சரியான ஆளு. போங்க போயி முதல்ல ரெஜிஸ்டர் பண்ணுங்க” சிரித்துக்கொண்டே சொன்னேன். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு சின்ன பயத்தைப் பார்க்க முடிந்தது.

“இல்ல அஜித், உங்களைப் பயப்படுத்த இதைச் சொல்லவில்லை. ஆக்சுவலா, இப்படி சிக்கல் வந்தா அதுக்கு காரணம் கவர்மெண்ட் இல்லை, நாமதான். நம்மளோட சேல்ஸ்ல, பிராஃபிட்ல சிக்கல் இருக்குறதா அர்த்தம். நியாயாமான பிராஃபிட்ல, சரியான டிமாண்ட் இருக்கக்கூடிய இடத்துல நம்மோட மினிமம் சேல்ஸ் டார்கெட்டை ரீச் பண்ணிட்டோம்னா இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. ஆனா, நாம சரியான மார்க்கெட்டையோ, சரியான பிராடக்டையோ தேர்வு செய்யாம அதில் ஏதாச்சும் தப்பு நடந்துச்சோ, நம்மள காப்பாத்த யாரும் வரமாட்டாங்க.

business plan
business planweb

காப்பாத்த வேண்டிய கவர்மெண்டாலயே நாம அழிஞ்சிடுவோம்! எக்கச்சக்கமான தொழில் ஆரம்பிச்ச வேகத்துல மூடுறதுக்கு முக்கியமான காரணம் இதுதான். ஒருத்தன் ஓர் ஆர்வத்துல தொழில் பண்ண இறங்குறான், இப்படி ஏதாச்சும் ஒரு சின்ன தப்பு நடந்தா, அவனுக்கு அந்தத் தப்பை சரி பண்ணிக்கத் தேவையான நேரம் கூட கிடைக்காது

இதையெல்லாம் சரி பண்ணனும்னா, ஒண்ணு டேக்ஸைக் குறைக்கணும், அல்லது தொழில்களோட நேச்சர், ஆரம்பிக்கப்படும் இடங்களைப் பொறுத்து அவங்களுக்கு முதல் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஜிஎஸ்டியிலருந்து விலக்கு அளிக்கணும். இப்படில்லாம் இருந்தா, கிராமங்கள்ல புதுசா தொழில்கள்லாம் முளைக்காது. அப்படியே காலங்காலமா இருக்கறாப்பல இருக்க வேண்டியதுதான்"

”அண்ணே, பாராளுமன்றத்துல சொல்ல வேண்டியதையெல்லாம் எங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க!”

”புலம்ப ஆள் கிடைச்சீங்களேனு புலம்பிகிட்டு இருக்கேன், வேற யாருகிட்ட இதயெல்லாம் சொல்றது?”

*

ஜிஎஸ்டியைப் பற்றி நான் எழுதியிருக்கும் கருத்துகளுக்கு உங்கள் பதில் என்ன? உங்களில் யாராவது ஜிஎஸ்டியால் பாதிப்படைந்திருக்கிறீர்களா? அது என்ன மாதிரியானது? பதில் தாருங்கள். இன்னொரு டாபிக்குடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com