பிசினஸ் டு பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான ஆஃப்-பிசினஸ் (OfBusiness) புதிதாக யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம்) பட்டியலில் இணைந்திருக்கிறது. நடப்பு 2021-ம் ஆண்டில் யுனிகார்ன் பட்டியலில் இணையும் 18-வது ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுவாகும்.
சமீபத்தில் இந்த நிறுவனம் 16 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது. இந்த முதலீட்டுக்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 150 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. சாப்ட்பேங்க் விஷன் பண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முறை முதலீடு செய்திருக்கின்றன.
இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட் அப் துறையில் சாப்ட்பேங்க் செய்யும் ஆறாவது முதலீடு இதுவாகும். கடந்த ஏப்ரலில் இந்த நிறுவனம் நிதி திரட்டியது. அப்போது, சுமார் 80 கோடி டாலர் அளவுக்கு மட்டுமே சந்தை மதிப்பு இருந்தது. மூன்று மாத்தில் சந்தை மதிப்பு இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
2015-ம் ஆண்டு தொடங்கபட்ட நிறுவனம் இது. நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் நிதி சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. ஸ்டீல், சிமெண்ட், பாலிமர், விவசாயம் சார்ந்த பொருட்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (எஸ்.எம்.இ) இவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் வருமானம் நான்கு மடங்கு அளவுக்கு உயர்ந்துவரும் சூழலில் செப்டம்பரில் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் ஐபிஓ வெளியிடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனர்கள் வசம் 25.68 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் பணியாளர்களுக்கு 282 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.