ஒன்றிய அரசில் பிஎம் கேர்ஸ் என வைத்துள்ள கணக்கில் தணிக்கை கிடையாது; விவரம் கிடையாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் பொது நிவாரண நிதி இணைய தளம் தொடக்கம் செய்யபட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே 7க்குப் பிறகு வரும் நிதியை தனிக்கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணைய தளம் சிறப்பாக இருந்ததால், அதை முன்மாதிரியாக கொண்டுள்ளோம். மொபைல், வெளிநாடு, உள்நாடு, கார்ப்பரேட் என எல்லா வகை நிதி வரவுகள் குறித்தும் இணைய தளத்தில் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசில் பிஎம் கேர்ஸ் என வைத்துள்ள கணக்கில் தணிக்கை கிடையாது. விவரம் கிடையாது. மே 7 முதல் நேற்று வரை ரூ.472.62 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது. இதுவரை 241 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தமிழக நிதி நிலையை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.