படிப்பை கைவிட்டு 8000 சம்பளத்தில் வாழ்வை தொடங்கி கோடீஸ்வரராக மாறிய ’நிகில் காமத்’-ன் கதை

படிப்பை கைவிட்டு 8000 சம்பளத்தில் வாழ்வை தொடங்கி கோடீஸ்வரராக மாறிய ’நிகில் காமத்’-ன் கதை
படிப்பை கைவிட்டு 8000 சம்பளத்தில் வாழ்வை தொடங்கி கோடீஸ்வரராக மாறிய ’நிகில் காமத்’-ன் கதை
Published on

பள்ளிக்கல்வி பிடிக்காமல் 14 வயதில் படிப்பை கைவிட்டு தொழிலைத் தொடங்கிய நிகில் காமத், தற்போது இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

17 வயதில் 8 ஆயிரம் சம்பளத்தில் வாழ்வை தொடங்கிய நிகில் காமத், பின்னர் தனது மூத்த சகோதரர் நிதின் காமத்துடன் சேர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவை இணைத்து நிறுவினார். இவர்கள் ட்ரூ பீகான் என்ற நிர்வாக மேலாண்மை நிறுவனத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். 2020இல் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் ஜெரோதா உருவான கதையைக்கூறிய நிகில்காமத் “எங்கள் அப்பா ஒரு வங்கியில் பணிபுரிந்தார், அதனால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். நாங்கள் கடைசியாக பெங்களூரில் குடியேறியபோது எனக்கு 9 வயது, தொடர்ச்சியான இடமாற்றங்களால் எனக்கு பள்ளியே வெறுத்துப்போனது. காலப்போக்கில் முறையான கல்வியின் மீதான ஆர்வத்தை இழந்ததால், எனது 14 வயதில் பயன்படுத்திய செல்போன்களை வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இது அம்மாவுக்கு தெரிந்தபோது, அவர் இந்த முயற்சியை ஒப்புக் கொள்ளாமல் தொலைபேசிகளை கழிப்பறையில் தூக்கி எறிந்தார்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ போர்டு தேர்வுகளுடன் பள்ளியை விட்டு வெளியேறினேன், அப்போது எனது பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர். பின்னர் நான் 17 வயதில் போலியான பிறப்புச் சான்றிதழை தயார் செய்து 8 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன்” எனக்கூறினார்

ஜெரோதா உருவான கதையைப்பற்றி சொல்லும் காமத் “18 வயதிலெல்லாம் நான் பங்குகளை சரியாக வர்த்தகம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது அப்பா தனது சேமிப்பில் பணத்தை என்னிடம் கொடுத்து அதை நிர்வகிக்க சொன்னார், அதையும் வெற்றிகரமாக செய்தேன். அதன்பின்னர் எனது மூத்த சகோதரருடன் சேர்ந்து காமத் அசோசியேட்ஸ் தொடங்குவதற்காக எனது வேலையை கைவிட்டேன்.  பெரும் முயற்சிக்கு பிறகு 2010 இல் ஜெரோதாவை தொடங்கினோம்.

நான் கோடீஸ்வரனாக மாறியதால் எதுவும் மாறவில்லை, நான் இப்போதும் 85% நாள் வேலை செய்கிறேன். 'இது என்னிடமிருந்து எடுக்கப்பட்டால் என்னவாகும்?' என்ற பாதுகாப்பின்மையுடனே வாழ்கிறேன். எனவே எனது ஒரே அறிவுரை என்னவென்றால் இப்போது வியர்வை சிந்தாததைப்பற்றி இன்னும் 5 ஆண்டுகள் கழித்து கவலைப்படக்கூடாது.  ஆகவே இப்போது செய்யக்கூடிய அனைத்தையும் சரியாக செய்யவேண்டும். அனைத்தையும் முயற்சி செய்ய ஒரு குருட்டு நம்பிக்கை வேண்டும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com