ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பளத்தில் புதிய நடைமுறை உருவாகப் போகிறது. The Wage Code 2019 என்னும் மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யபட்டது. இதன்மூலம் பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு குறையும். அதேபோல, புதிய நடைமுறையால் நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும்.
புதிய நடைமுறை என்ன?
ஒவ்வொருவரும் தங்களுடைய பே-ஸ்லிப்பை எடுத்து பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும். இதற்குக் காரணம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை பொறுத்தே பி.எஃப் மற்றும் பணிக்கொடை (Gratuity) நிர்ணயம் செய்யப்படும்.
அதனால், இந்த இரண்டின் அளவை குறைவாக வைத்திருந்தால், இதற்கு ஏற்ப பிஎஃப் செலுத்தினால் போதும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறையின்படி ஒருவருடைய மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் இதர சலுகைகள் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியானால், 50 சதவீத தொகைக்கு (அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை படியில் 12 சதவீதம் அளவுக்கு பிஎஃப் செலுத்த வேண்டும்) பிஎஃப் செலுத்த வேண்டும். இதனால் பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகையும் குறைவாக இருக்கும். அதேபோல பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப நிறுவனங்களும் கூடுதலாக பிஎஃப்-க்கு (மற்றும் பென்ஷன் திட்டத்துக்கு) செலுத்த வேண்டி இருக்கும்.
பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் தொகை குறைவாக இருந்தாலும் அந்த தொகை பிஎஃப்-ல் இருக்கும். ஒய்வு காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல பணிக்கொடையும் அதிகமாக இருக்கும்போது ஓய்வு பெறுதல் அல்லது வேலையில் இருந்து விலகும்போது கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், நீண்ட கால அடிப்படையில் பணியாளர்களுக்கு இது நல்ல திட்டமே. மறைமுகமாக நீண்ட காலத்தில் பெரும் தொகையை சேமிக்க முடியும்.
ஆனால், இந்தப் புதிய விதிமுறை மூலம் 4 முதல் 10 சதவீதம் வரை கைக்கு கிடைக்கும் சம்பளம் குறைவாக இருக்கும். சம்பளத்தில் அதிக தொகையை கடன் தவணைக்காக செலுத்துவோர் இருக்கும்பட்சத்தில், அவர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 40 சதவீதம் வரை கடன் தவணைத் தொகை இருக்கலாம் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. ஒருவேளை 40 சதவீத தொகையை கடன் இஎம்ஐ (வீட்டுக்கடன், கார்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட) செலுத்துவதாக வைத்துக்கொண்டால், சில சதவிகித சம்பள குறைவுகூட பெரிய விஷயமாக மாறும்.
நிறுவனங்களுக்கு என்ன?
புதிய விதிமுறையால் நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்படும். பணியாளர்கள் செலுத்தும் அதே பி.எஃப் தொகையை நிறுவனங்களும் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் நிதி சுமை ஏற்படும். சில நிறுவனங்கள் `காஸ்ட் டு கம்பெனி' (சிடிசி) என்னும் நடைமுறையில் செயல்படுகின்றன. ஒரு பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துவிடுகின்றன. சில நிறுவனங்கள் அந்த முறையில் இல்லாமல் செயல்படுகின்றன. பணிக்கொடை உள்ளிட்டவற்றை நிறுவனம் கொடுக்கிறது. திடீரென பிஎஃப்-க்கு செலுத்தும் தொகையும் பணிக்கொடைக்கு செலுத்தும் தொகையும் அதிகரித்தால் அவர்களுக்கு தேவையில்லாத நிதி சுமை ஏற்படும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட கடிதத்தில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். புதிய கடிதத்தில் சலுகைகள் எவ்வளவு, அடிப்படை சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட மொத்த தகவல்களையும் மாற்றி பணியாளர்களுக்கு தர வேண்டும். அப்படி தரும்போது தற்போது வாங்கும் சம்பளத்தைவிட குறைவாக இருக்கும். இதனால் நிறுவனத்துக்குள் சலசலப்பு ஏற்படும். இதைக் களைய வேண்டும் என்றால் சம்பளத்தை மாற்றி அமைத்து புதிய கடிதம் வழங்க வேண்டும். அதாவது, மறைமுகமாக ஊதியத்தை உயர்த்த வேண்டிய சூழல் இருக்கும். அதனால் நிறுவனங்களுக்கும் இதில் சிக்கல் உள்ளன. இது தவிர பணியிடத்தில் பாதுகாப்பு, பணிச்சூழல் குறித்து இந்தச் சட்டத்தின் தெரிவித்திருக்கப்பட்டிருப்பதால் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.
பிஎஃப்-க்கு அதிகம் செலுத்துவதால் சமூகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். ஆனால், பொருளாதாரம் மந்தமாக உள்ள இந்தச் சூழலில் இதனை தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். பொருளாதாரம் மீண்டு நிறுவனங்கள் லாப பாதைக்கு செல்லும்போது இவற்றை செய்யலாம் என நினைக்கின்றன.
இந்தச் சட்டத்தை தள்ளிப்போடுவதற்கு மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தை தொழில்துறையினர் சந்தித்து முறையிட திட்டமிட்டிருக்கிறார்கள். சி.ஐ.ஐ., ஃபிக்கி உள்ளிட்ட தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைச்சகத்தை சந்தித்து விவாதித்தன.
இந்தச் சட்டத்தின்படி போனஸுக்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், போனஸில் பல வகைகள் உள்ளன. நிறுவனத்தின் இணைவதற்காக போனஸ், செயல்பாட்டு அடிப்படையிலான போனஸ், பணியாளர்களை நிறுவனத்துக்கு கொண்டுவந்தால் போனஸ் என பல சலுகைகள் பணியாளர்களுக்கு நிரந்தரமாக அல்லாமல் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இந்தத் தொகைக்கும் என பிஎஃப் வழங்க முடியுமா என்பது சிஐஐ உள்ளிட்ட அமைப்புகளின் கேள்வியாக இருக்கிறது. மேலும், மொத்த சம்பளத்தில் எவையெல்லாம் வரும் என்பது குறித்த தெளிவு கிடைத்தால், இந்த சட்டத்தை எளிதாக அமல்படுத்தலாம் என சிஐஐ தெரிவித்திருக்கிறது.
நேற்றைய (டிச.24) கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய மஸ்தூர் சங்கம் வேறு கோரிக்கையை வைத்திருக்கிறது. தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு முக்கியம். அதனால் மொத்த சம்பளத்தையும் (100% சம்பளம்) அடிப்படையாக கொண்டு பிஎஃப் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரியிருக்கிறது.
இதுதான் புதிய ஊதியக் கொள்கை விஷயத்தில் தற்போதைய நிலைமை. நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா? அல்லது ஏற்கெனவே திட்டமிட்டபடி, இதனை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்தே இந்த விவகாரத்தில் தெளிவு பிறக்கும்.
இப்போதைக்கு, பணியாளர்கள் தங்களது 'பே ஸ்லிப்'-ஐ ஒருமுறை பார்த்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
- வாசு கார்த்தி