ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதியக் கொள்கை.. என்ன பலன்? என்ன இழப்பு? ஓர் அலசல்

ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதியக் கொள்கை.. என்ன பலன்? என்ன இழப்பு? ஓர் அலசல்
ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதியக் கொள்கை.. என்ன பலன்? என்ன இழப்பு? ஓர் அலசல்
Published on

மத்திய அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டங்களில் பலவித மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியாக புதிய ஊதியக் கொள்கை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இப்புதிய ஊதியக் கொள்கைகளால் என்னென்ன மாற்றங்கள்? என்ன பலன்? என்ன இழப்பு? என்பது குறித்து விளக்குகிறார், காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.

‘’புதிய ஊதியக் கொள்கை மாற்றத்தின்படி ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கும் மொத்த ஊதியத்தில் அடிப்படை சம்பளம் (basic pay) என்பது இனி 50 சதவீதமாக இருக்கும்.

இதுவரை அடிப்படை சம்பளம் என்பதை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதத்தில் கணக்கிட்டு வந்தன. பெரும்பாலும் அடிப்படை சம்பளம் என்பது மொத்த ஊதியத்தில் சுமாராக 30 சதவீதத்தில் இருந்து 40% வரை இருந்தது. மிகுதியாக வழங்கப்பட்ட போக்குவரத்துப் படி, வீட்டு வாடகைப் படி, உணவுப் படி போன்ற பிற படிகள் இனி 50 சதவீதத்திற்குள் இருக்கும்.

இனி எல்லா நிறுவனங்களின் அடிப்படை சம்பள நிர்ணயம் என்பது மொத்த ஊதியத்தில் 50% என மாற்றி ஒரே சமமான அடிப்படை ஊதிய விழுக்காடு இருக்கும். கவனிக்க, ஊதிய விழுக்காடு மட்டுமே மாற்றம் இருக்கும். ஊதியம் அந்தந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அளவிலேயே தொடரும்.

எடுத்துக்காட்டாக ஒருவரின் மொத்த ஊதியம் (Gross salary) 10 ஆயிரம் என்றால் முன்பு அடிப்படை சம்பளம் சுமார் 3 லிருந்து 4 ஆயிரம் வரை இருக்கும். மற்ற படிகள் மீதி இருக்கும். இனி அடிப்படை சம்பளம் 5 ஆயிரமும் மற்ற படிகள் 5 ஆயிரம் என இருக்கும்.

சரி.. இதனால் யாருக்கு என்ன பலன்? என்ன இழப்பு?

இந்த புதிய கொள்கைப்படி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அடிப்படை ஊதியத்தின் விழுக்காட்டில் இருந்து, மற்ற படிகள் கணக்கிடப்படும் நடைமுறை ஒரு நிறுவனத்தில் இருந்தால் ஊதிய அளவு கொஞ்சம் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில் எல்லா தனியார் நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவாகத்தான் படிகளை (fixed allawance) வழங்குவதால் எப்படியும் தற்போது தரப்படும் நிகர ஊதியத்துக்கு  ஏற்ப மற்ற படிகள் மாற்றி அமைக்கப்பட்டு அதே ஊதியமே கிடைக்கும். பெரிய மாற்றமிருக்காது.

அதே நேரம், அடிப்படை சம்பளத்தில் இருந்து PF தொகை கணக்கிடப்படுவதால் ஒரு ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் PF தொகை கூடும். இதன் காரணமாக ஒரு ஊழியர் பிடித்தங்கள்போக வீட்டிற்கு தற்போது கொண்டு போகும் நிகர சம்பளம் (net salary) சிறிது குறையலாம். குறையும் அந்த சம்பளம் ஒரு கட்டாய சேமிப்பாக PFல் இருக்கும்.

இதில் ஒரு நன்மை என்னவென்றால் நிறுவனங்கள் தங்கள் பங்காக செலுத்த வேண்டிய PF தொகையும் ஒருவருக்கு கூடுதலாக கிடைக்கும். இதனால் பணி ஓய்வுக்குப் பிறகு ஒருவருக்கு திரும்பக் கிடைக்கும் PF சேமிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும் பணிக்கொடை (Gratuity) விகிதமும் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுவதால் அந்த தொகையும் கூடுதலாக பணி ஓய்வின் போது கிடைக்கும். உடனடி பலனாக இந்த ஊதிய திருத்தத்தால் பாதகம்போல தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் இது சாதகமான ஒன்றே.

ஒரு பணியாளரின் அடிப்படை ஊதிய விகிதத்தின்படியே மாத ஊதியத்தில் வருமான வரி கணக்கிடப்பட்டு TDS பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே நீங்கள் செலுத்தும் வருமானவரி கூடுவதற்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். மற்றபடி பார்த்தல் அரசுக்கு PF சேமிப்பின் மூலம் கிடைக்கும் சுழற்சி நிதி கூடுதலாக கிடைக்கும் மற்றும் வருமான வரி வருவாயும் கொஞ்சம் கூடும்.’’ என்கிறார் அவர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com