வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி முடிவெடுத்திருக்கிறது. இருந்தாலும் எவ்வளவு விலை உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக மாருதி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் கடந்த ஜனவரி 18-ம் தேதி கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.34,000 வரை உயர்த்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் விலையை உயர்த்தினாலும், விற்பனையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த பிப்ரவரில் 1.52 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 11.8 சதவீத உயர்வாகும். அதனால் தற்போதைய விலை உயர்வும் விற்பனையை பாதிக்காது என்றே சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள். புதிய மாடல்கள் மற்றும் பொருளாராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக விற்பனை உயரும் என கருதுகிறார்கள்.
கார்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான ஸ்டீல் விலை கடந்த ஓர் ஆண்டில் மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு டன் ஸ்டீல் ரூ.36,000 வர்த்தமானது. ஆனால், தற்போது ஒரு டன் ரூ.56000 அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் தேவை உயரந்திருப்பதால் விலை உயர்ந்திருக்கிறது. ஸ்டீல் தவிர காப்பர், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய உலோகங்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன. இதனால் கார்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியவில்லை என்றும், இந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் மாருதி சுசூகி தெரிவித்திருக்கிறது.
தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் தேவை இருப்பதால், இந்த விலை ஏற்றம் பாதிக்காது என்றும் கருதப்படுகிறது. அதேபோல முக்கிய நிறுவனமான மாருதி விலையை உயர்த்தி இருப்பதால், இதர நிறுவனங்களும் விலையேற்றத்தை வரிசையாக அறிவிக்க கூடும் என்றும் கருதப்படுகிறது.