உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி 9வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தன. இந்த நேரத்தில் அம்பானி தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17% பங்குகளை விற்றார்.
இந்தப் பங்குகளை ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானி சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 64.5 பில்லியன் டாலர் ஆனது. இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனால், தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். அவர் தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏற்கெனவே, இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்த அம்பானி, ஆசியாவிலும் முதல் பணக்காரர் என்ற இடத்திற்கும் முன்னேறியுள்ளார். அத்துடன் இந்தியாவின் 2வது, 3வது, 4வது மற்றும் 5வது ஆகிய இடங்களில் இருக்கும் பணக்காரர்கள் 4 பேரின் சொத்து மதிப்பையும் மொத்தமாக சேர்த்தால் வரும் தொகைக்கு நிகராக அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் விப்ரோ நிறுவன உரிமையாளர் அசிம் பிரேம்ஜி (16 பில்லியன் டாலர்) 2வது இடத்திலும், ஹெச்சிஎல் நிறுவன உரிமையாளர் ஷிவ் நாடார் (15 பில்லியன் டாலர்) 3ஆம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி (12.8 பில்லியன் டாலர்) 4ஆம் இடத்திலும், டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமணி (12.2 பில்லியன் டாலர்) 5ஆம் இடத்திலும் உள்ளனர்.