வியாபாரத்திலும், விஞ்ஞானத்திலும் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றுகொண்டிருந்த உலகத்தை, கொரோனா எனும் ஒற்றை வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடக்கியது. உலகப் பொருளாதாரம் முதல், உள்ளூர் வியாபாரம் வரை முடங்கியது. சந்துகளில் இருந்த பொட்டிக்கடை முதல் சர்வதேச பொருளாதாரம் வரை சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸால் இப்படி அனைவருமே முடங்கிக் கொண்டிருந்த காலத்தில் தான் ஒருவர் தனது வியாபார யுக்தியை பயன்படுத்தி, உலக முதலாளிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் தனது சொத்து மதிப்பை உயர்த்தினார். அவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி.
என்ன செய்வது ? என உலக முதலாளிகள் குழம்பிக்கொண்டிருந்த சமயத்தில், குழம்பிய குட்டையில் மீன்களைப் பிடிப்பதுபோல முதலீடுகளை கவர்ந்தார் முகேஷ் அம்பானி. இதற்கு அவர் பயன்படுத்திய ஒற்றை ஆயுதம், ஜியோ எனும் பிரம்மாண்ட பிம்பம். இந்தியா எனும் உலகின் பெரும் சந்தையில் அமேசான், ஃபிளிப்கார்ட் எனும் இரண்டு ஆன்லைன் ஜாம்பவான் விற்பனையாளர்கள் கொடி பறந்து கொண்டிருக்கின்றனர்.
இதை கவனித்த அம்பானி, தானும் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவுள்ளதாகவும், குறிப்பாக மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையை உடனே தொடங்கவுள்ளதாக அறிவித்தார். அதற்காக ஜியோமார்ட் எனும் செயலியை தொடங்கிய அவர், அதன்மூலம் ஆன்லைன் ஆர்டர்களைப் பெற்று இந்தியா முழுவதும் டெலிவரியை தொடங்கயிருப்பதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் முயற்சி என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே வேறுவிதமாக காய்களை நகர்த்தினார். அம்பானி தனது ஜியோ மார்ட் வியாபார தொடக்கத்தை முன்னிட்டு, ஜியோவின் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்தார். அதைக்கேட்டதும், உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் ஆகியவை ரூ.1,15,693.95 கோடிக்கு ஜியோவின் பங்குகளை வாங்கின. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானி சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 64.5 பில்லியன் டாலர் ஆனது. இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். அதன்பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபபர் பங்குகளில் கத்தார் நாட்டை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. இவ்வாறாக பெற்ற முதலீடுகளை எல்லாம் தனது எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட வியாபாரத்திலேயே மீண்டும் அம்பானி முதலீடு செய்தார். இதனால் தொடர் ஏற்றத்தில் அவரது சொத்து மதிப்பு சென்றுகொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அம்பானியின் சில்லறை வியாபாரத்தின் பங்குகளில் சில்வர் லேக் நிறுவனம் முதலீடு செய்வதாக வெளியான தகவலால், பங்கு சந்தைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ.2,343.90 என உயர்ந்தது. இதனால், அம்பானியின் சந்தை மூலதனம் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமானது. அத்துடன் அவருடன் நிகர சொத்து மதிப்பு 88.4 பில்லியன் டாலரை கடந்தது.
இதனால் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 5வது இடத்தை அம்பானி பிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வியாபாரி உலகமே வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும்போது வருமானத்தை ஈட்டுகிறார் என்பது இயல்பு. ஆனால் உலகமே முடங்கிய நிலையிலும் தனது யுக்தியை பயன்படுத்தி இத்தனை உயரத்தை தொட்ட அம்பானியின் வியாபார யுக்தி, அவர் எப்பேற்பட்ட வியாபாரி என்பதை வெளிக்காட்டி உலக பணக்காரர்களை பதற வைத்திருக்கிறது.
இத்தனைக்கும் இந்த முதலீடுகளை எல்லாம் ஈர்ப்பதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோது பெரும் நஷ்டத்தை அம்பானி சந்தித்திருந்தார் என்பது முக்கியமான ஒன்றாகும்.