ஆர்பிஐ அறிவிப்பின்படி 3 மாதங்கள் கடனுக்காக மாதத்தவணைகளை கட்ட வேண்டாம் என்ற போதிலும் அதற்கான வட்டியை கட்ட வேண்டும் என மாநில வாரியான வங்கிகள் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என பலரும் வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு மக்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான இ.எம்.ஐ எனப்படும் மாதத்தவனை செலுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் தேசிய பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைப்படி 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டாம் என அறிவித்தன. இருந்தபோதிலும் தனியார் மற்றும் மாநில வங்கிகள் இ.எம்.ஐ தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என மட்டுமே கூறியிருந்தன.
இந்நிலையில், நிபந்தனைகளுடன் கூடிய இ.எம்.ஐ சலுகையை மாநில மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டாம் எனும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக ஒரு ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மூன்று மாத தவணைகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த மூன்று மாதங்களுக்கும் உரிய வட்டியை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் வட்டியை தவிர்க்க நினைத்தால் எப்போதும் போல இ.எம்.ஐ செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை, கடன் பெற்றவர்களுக்கு சென்று சேராத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.