குடியரசுத் தலைவரின் சம்பளம் உயர்வு.. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்பிக்கள் சம்பளம் தானாக உயர்வு... கார்ப்பரேட் வரி குறைப்பு என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை மட்டும் பூர்த்தி செய்யாமலேயே தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார்.
2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தபோது பெரும்பாலான நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது இந்தாண்டாவது வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான். ஆனால் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். வருமான வரி விலக்கு வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஜெட்லி கூறினார். அதாவது ஏற்கனவே இருந்த வருமான வரி விலக்கிற்கான வரம்பு ரூபாய் 2.5 லட்சம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் அதற்கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியாகவே உள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், குடியரசுத் தலைவர் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல குடியரசுத் துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூபாய் 4 லட்சமாகவும், ஆளுநரின் சம்பளம் ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூபாய் 3.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பணவீக்கத்தை பொறுத்து எம்.பிக்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாக உயர்த்தப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
அருண் ஜெட்லி மேலும் பேசும்போது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், 250 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25% ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ள நிதியமைச்சர், கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
புதிதாக வருமான வரித்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இந்தாண்டும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.