கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் விமானப் பயணிகளுக்கு உணவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என விமான சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து டெல்லி போன்ற நகரங்களுக்கு பயணம் செய்யும்போது பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கும் என்பதால், அத்தகைய விமான சேவைகளில் உணவு அளிக்கலாம்.
அதே நேரம் சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது மதுரை போன்ற நகரங்களுக்கு பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருக்கும் என்பதால், அத்தகைய விமான சேவைகளில் உணவு பொருட்களை விற்கவோ அல்லது இலவசமாக விநியோகவோ தடை செய்யப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடு உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லக்கூடிய விமான சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
உணவு உண்ணும் நேரத்திலே பயணிகள் தங்களுடைய முகக்கவசத்தை அகற்றி விடுவார்கள் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- கணபதி சுப்ரமணியம்