கடந்த நிதி ஆண்டில் (2021-22) ஆட்டோமொபைல் துறையின் முக்கியமான நிறுவனமான மாருதியின் பங்களிப்பு எட்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மாருதியின் பங்களிப்பு 43.65 சதவீதம் மட்டுமே. அதாவது கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் விற்பனையாக கார்களில் மாருதியின் பங்கு 43.65 சதவீதம் மட்டுமே. ஆனால் மூன்று நிதி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பாதி அளவுக்கு (51%) மாருதியாக இருந்தது கவனிக்கத்தக்கது.
தற்போது படிப்படியாக குறைந்து 43 சதவீதம் எனும் அளவில் இருக்கிறது. இதற்கு முன்பாக 2013-14-ம் நிதி ஆண்டில் 42 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு சந்தை உயரத்தொடங்கிய நிலையில் கடந்த நிதி ஆண்டு கடுமையாக சரிந்திருக்கிறது.
எஸ்யூவி பிரிவுக்கு தேவை அதிகரித்திருப்பதால் மாருதியின் பங்களிப்பு குறைந்திருப்பதாக தெரிகிறது.
இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையான கார்களில் ஹூண்டாய் பங்கு 15.78 சதவீதமாகும். இதற்கு முந்தைய நிதி ஆண்டு (2020-21) 17.39 சதவீதமாக இருந்தது.
மூன்றாம் இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. 2020-ம் நிதி ஆண்டில் ஐந்து சதவீதமாக இருந்த சந்தை தற்போது 12.14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது கடந்த இரு ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில மாடல்களை அறிமுகம் செய்ததால் சந்தை பங்களிப்பு உயர்ந்திருக்கிறது.
நான்காம் இடத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது இந்த நிறுவனம் வசம் 7.4 சதவீத சந்தை உள்ளது.
ஆனால் ஐந்தாம் இடத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2020-ம் நிதி ஆண்டில் இந்திய சந்தைக்கு வந்த கியா மோட்டார்ஸ் தற்போது 6.12 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சியால் மாருதியின் சந்தை பங்களிப்பு குறைந்திருக்கிறது. கியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் மிக கணிசமான சந்தையை மட்டுமே வைத்திருக்கின்றன.
முதல் இடத்தில் வேகன் ஆர்
கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையாக கார் மாருதியின் வேகன் ஆர். இந்த மாடல் 1.88 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதற்டுத்து ஸ்விப்ட் (1.67 லட்சம்), பலேனோ (1.46 லட்சம்) ஆல்டோ (1.45 லட்சம்), டிசையர் 1.26 லட்சம் விற்பனையாகி இருக்கிறது. முதல் ஐந்தும் மாருதியின் பிராண்ட்கள் ஆகும்.
ஆறாவது இடத்தில் டாடாவின் நெக்ஸான் (1.24 லட்சம்) ஏழாவது இடத்தில் ஹூண்டாய் கிரடா (1.18 லட்சம்) இருக்கிறது. அடுத்த மூன்று இடத்தில் எர்டிகா, பிரிசா, இகோ ஆகிய மாருதியின் வாகனங்களே உள்ளன.
முதல் பத்து இடத்தில் மாருதியின் 8 வாகனங்கள் உள்ளன. இதுதவிர டாடாவின் நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் கிரெடா ஆகியவை மட்டுமே முதல் பத்து இடங்களில் உள்ளன.