சீனாவின் மத்திய வங்கி, பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் வளர்ச்சியைப் புதுப்பிக்கும் நோக்கில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு அதன் மிகப்பெரிய பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கூடுதல் நிதி நடவடிக்கைகள் தேவை என்று ஆய்வாளர்கள் எச்சரித்தாலும், இந்த அறிவிப்பு சீன பங்குகளில் ஒரு பேரெழுச்சியைத் தூண்டியுள்ளது.
இவை எல்லாம் சீன ரியல் எஸ்டேட் சரிவில் ஆரம்பித்தது. அந்த நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் Evergrande கடந்த ஆண்டு திவாலானது. தற்போது சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையானது 2008-க்கும் கீழே சென்றுள்ளது. ரியல் எஸ்டேட் விலைகள் 80% வரை சரிந்துள்ளன. இதன் தாக்கம் பொருளாதாரம் முழுதும் பரவி, பொருட்கள் விலை குறைவுக்கு வழி வகுத்தது. தொடர்ந்து 5 காலாண்டுகளாக விலைவாசி குறைந்து deflation நிலை இருந்து வருகிறது. இது உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம், உலகம் முழுதும் விலைவாசி உயர்ந்து வரும் வேளையில் எப்படி சீனாவில் மட்டும் குறைந்து விட்டது என்று. 70% சீனர்களின் பணம் ரியல் எஸ்டேட் & பங்குச்சந்தையில் இருந்த நிலையில் இந்த மந்த நிலையால் தொழில்துறை மந்த நிலைக்குச் சென்று, சம்பளம் கூட பலருக்குக் குறைய தொடங்கி விட்டது.
சீனா அரசு இறுதியாக கடந்த வாரம் பல பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. அதன்படி அந்நாட்டின் மக்கள் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது. $142 பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு அளித்தது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு சீன பங்குகள் 2008ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த சில நாட்களில் பெரும் எழுச்சி அடைந்துள்ளன.
இருப்பினும், அனலிஸ்டுகள் மக்கள் வங்கி (PBOC) இன் பணப்புழக்க நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து கடன் தேவை இன்னும் மிகக் குறைவாக இருப்பதால், புதிய நடவடிக்கைகள் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளைப் போதுமான அளவில் ஊக்குவிக்காது என்ற கவலை உள்ளது.
மக்கள் வங்கி கவர்னர் பான் கோங்ஷெங், கடன் வாங்கும் செலவைக் குறைப்பதற்கும், நுகர்வோருக்கு அடமானத் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைப்பதற்கும் நோக்கங்களை எடுத்துக்காட்டிய பிறகு, யுவான் டாலருக்கு எதிராக 16 மாத உயர்வாக உயர்ந்தது. சில நிபுணர்களின் கூற்றுப்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII-கள்) தங்கள் நிதிகளில் சிலவற்றை சீனாவிற்கு மாற்றலாம், ஏனெனில் அங்குள்ள சில பங்குகளின் மதிப்பீடுகள் இந்தியாவில் உள்ளதை விட கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.
சீனாவின் சமீபத்திய பணவியல் நடவடிக்கைகள் நிதிக் கொள்கைகளால் நிரப்பப்பட்டால், இது உள்கட்டமைப்பில் முதலீட்டைத் தூண்டக்கூடும், மேலும் இது போன்ற முன்னேற்றங்கள் உலோகங்கள் மற்றும் தாதுக்களுக்கான சீனாவின் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கலாம், உலகச் சந்தைகளில் அதிகப்படியான சீன ஏற்றுமதி பற்றிய கவலைகளைத் தணிக்கலாம். இதன் விளைவாக, உலோகங்கள் மற்றும் கனிமங்கள் துறையானது உலகளவில் மேம்பட்ட தேவை மற்றும் மிகவும் சாதகமான விலைச் சூழலை அனுபவிக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் வட்டி குறைப்பு, பணப்புழக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதால், பணம் அதிக வளர்ச்சியைக் காட்டும் நாடுகளை நோக்கிச் செல்லும். அந்த வகையில் சீனாவை விட அதிக வளர்ச்சியைக் காட்டும் இந்தியாவிற்கு நீண்ட நாள் நோக்கில் முதலீடுகள் உள்ளே வரலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். எனினும் குறுகிய காலத்தில் சீன பங்குச்சந்தை இந்திய பங்குச்சந்தைகளை விட கவர்ச்சியாக உள்ளதால் FII முதலீடுகள் இந்தியாவை விட்டுச் செல்லலாம்.