தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை பாதாளத்தை நோக்கி... விழுகிற கத்தியை பிடிக்கலாமா ?

பங்குசந்தை நேற்று பயங்கர வீழ்ச்சியை கண்டது. நேற்று ஒரு நாள் மட்டும் 30லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
SENSEX NIFTY
SENSEX NIFTYSENSEX NIFTY
Published on

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பொதுத்தேர்தல்  முடிவுகள் வந்துவிட்டன. ஆளும் பிஜேபி மூன்றாவது முறையாக வென்று உள்ளது . ஆனால் கடந்த இரண்டு முறையை போல் இல்லாமல், இந்தமுறை பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சியை  அமைக்க உள்ளது.  

பெரும்பாலான ஊடகங்கள் & பங்குச்சந்தை ப்ரோக்கிங் நிறுவனங்கள் மீண்டும் பிஜேபி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று கணித்து இருந்தன. இவை “மோடி 3.0 -  வாங்கவேண்டிய பங்குகள்”என்ற அளவுக்கு சென்று நம்பிக்கையை விதைத்தனர். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவு அவர்களின் நம்பிக்கையை தவிடுபொடி ஆக்கிவிட்டது.

ஏன் இந்த சரிவு?

முந்தைய ஆட்சியை போல் இல்லாமல் கூட்டணி ஆட்சி என்பதால் இனி அரசு பொருளாதார சீர்திருத்தங்களை (பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, தொழிலாளர் சட்டங்கள்,  Uniform Civil Code போன்ற சட்டங்கள்) முன்பு போல் வேகமாக செய்ய முடியாது. மேலும் கூட்டணி ஆட்சி என்பதால் யாருக்கு எந்த அமைச்சகம் கிடைக்கும், நம்ப முடியாத கூட்டணி கட்சிகளால் இந்த அரசு நிலைத்து இருக்குமா என்பது போன்ற விடை தெரியாத கேள்விகளால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். நேற்று மட்டும்  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.12436 கோடி அளவுக்கு பங்குகளை விற்று உள்ளனர், மியூச்சுவல் பண்ட் போன்ற உள்நாட்டு முதலீட்டாளர்களும் ரூ.3318 கோடி அளவுக்கு பங்குகளை விற்று உள்ளனர்.  இதனால் பங்குசந்தை நேற்று பயங்கர வீழ்ச்சியை கண்டது. நேற்று ஒரு நாள் மட்டும் 30லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.

கூட்டணி அரசாங்கம்  அவ்வளவு மோசமானதா ?

ஒரு கூட்டணி அரசாங்கம் எப்போதும் பங்குச் சந்தைகளுக்கு மோசமானதாக இல்லை. PMIndia.gov.in இன் தரவுகளின்படி, டிசம்பர் 2, 1989 மற்றும் அக்டோபர் 10, 1990 க்கு இடையில் வி.பி. சிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் கீழ் சென்செக்ஸ் 95.6 சதவீத வளர்ச்சியை பெற்றது.

மே 22, 2004 மற்றும் மே 22, 2009 க்கு இடையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 (யுபிஏ-1) க்கு தலைமை வகித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்க ஆட்சியில் சென்செக்ஸ் மிகப்பெரிய அளவில் 179.9% உயர்ந்தது. 

அதிக மதிப்பில் பங்குகள் :

இந்திய பங்குசந்தையில் Largecap பங்குகள் பெரும்பாலும் மதிப்பு குறைவாகவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிக உச்சத்திலும் உள்ளது. அரசுத்துறை வங்கிகள், ரயில்வே, கட்டுமான மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பங்குகள் சமீபநாட்களில் புதிய உச்சத்தை தொட்டன. முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளை வரும் நாட்களில் மிக கவனமுடன் கையாள வேண்டும்.       

சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் :

ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு வரும் சிறிய அதிர்வுகள் போல இனி வரும் சிறிது  நாட்களில், அரசு அமைந்து, துறைகள் ஒதுக்கப்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை பங்குச்சந்தை கீழயே செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்று விழுந்தது போல் மிகப்பெரிய சரிவாக இல்லாமல் சிறிதுசிறிதாக விழுவதற்கு வாய்ப்பு அதிகம். முதலீட்டாளர்கள் பங்குகள் விழுந்தவுடனேயே வாங்குவது என்பது விழுகும் கத்தியை பிடிப்பது போல் ஆகும். 

இது போன்ற நேரத்தில் பங்குசந்தையில் பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்வது உகந்தது.  FMCG, IT, பார்மா  மற்றும் நுகர்வு சார்ந்த பங்குகளில் அதன் மதிப்பை பொறுத்து முதலீடுகளை செய்யலாம். ஒரே நேரத்தில் மொத்த முதலீட்டையும் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக வரும் நாட்களில் முதலீடுகளை மேற்கொள்வது பாதுகாப்பானது.

Summary

* பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சந்தை ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை மற்றும் இதை  நிதி ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த நிதி நிபுணருடன் கலந்தாலோசிக்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com