உச்சத்தில் VIX... வீழ்ச்சியில் பங்குச்சந்தை... தேர்தல் காரணமா..?
தேர்தல் & பங்குச்சந்தை
இந்தியாவின் பரபரப்பான $4.6 டிரில்லியன் பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதமாக சந்தை குறியீடுகள் மேலும் கீழுமாக சென்றுகொண்டிருக்கின்றன. காரணமே இல்லாமல் பங்குகளின் விலை வீழ்ச்சிப் பாதையில் செல்வதால் முதலீட்டாளர்கள் என்ன செய்வதென்ன யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் முதல் டீக்கடைகள் வரை நடக்கும் விவாதம் தான் சந்தையிலும் எதிரொலிக்கிறது. ஆம், இது தேர்தல் காலம். 'ஆப் கி பார் சார் சௌ பார்' முழக்கம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. எப்படியாவது வென்றுவிட்டால் போதும் என்கிற மனநிலையில் தான் தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழப்பமான நிலைமை ஷேர் மார்க்கெட்டிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது. தேர்தல் திருவிழா உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், இந்தியாவின் VIX இன்டெக்ஸ் (பய அளவீடு)" எல்லோரும் உற்று நோக்கும் மையப்பொருளாக மாறி உள்ளது., இது வர்த்தகர்களை பதட்டத்தின் விளிம்பில் ஆழ்த்தியுள்ளது.
பயத்தின் அளவு அதிகரிக்கிறது
பங்குகளின் option விலைகளைப் பயன்படுத்தி, அடுத்த 30 நாட்களில் எதிர்பார்க்கப்படும் சந்தை ஏற்ற இறக்கத்தை அளவிடும் இந்தியா VIX இன்டெக்ஸ்(India Volatility Index), தொடர்ந்து ஒன்பது நாட்களாக உயர்ந்துள்ளது. மார்ச் 2020க்குப் (கொரோனா காலம்) பிறகு இப்படி தொடர்ந்து ஏறுவது இதுவே முதல்முறை. பதினைந்து நாட்களுக்கு முன்பு, இது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது, ஆனால் இப்போது அது ஓர் ஆண்டின் உச்சத்தில் இருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் நிகழ்த்தப்பட்ட பிரசாரங்களையும், இப்போது நடக்கும் பிரசாரங்களையும் தொடர்ந்து கவனித்தாலே இது ஏன் இப்படி உயர்கிறது என்பதை நம்மால் கணிக்க முடியும்.
மோடியின் மூன்றாவது பதவிக்காலம்?
சந்தை நடுக்கத்தில் இருந்தபோதிலும், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலத்தைப் பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய தேர்தல் மாரத்தான் தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை தொடரும். மக்களவையில் உள்ள 543 இடங்களில் 400-க்கும் அதிகமான இடங்களை தனது பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றும் என்று மோடி தைரியமாக கணித்துள்ளார். ஆனால் சமீபத்திய முன்னேற்றங்கள் கதையை மாற்றியுள்ளன.
குறைவான வாக்குப்பதிவு
மோடிதான் வெற்றி பெறுவார் என்று சந்தை முதலில் உறுதியாக நம்பியது . இருப்பினும், முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவின் போது குறைவான வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது. குறைவான வாக்குப்பதிவு தொடர்ந்து பதிவாகுவது பங்கு வர்த்தகர்கள் மத்தியில் பயத்தை அதிகரித்து உள்ளது . இது ஆளும் கூட்டணியின் செயல்பாட்டை பாதிக்குமா? 2019 தேர்தலில், பாஜக தனது பெரும்பான்மையை 303 இடங்களாக விரிவுபடுத்தியது, தற்போதைய பாஜக கூட்டணி 353 இடங்களை குறி வைத்துள்ளது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு 290-300 இடங்களே கிடைக்கும் என்று சந்தையில் கிசுகிசுக்கப்படுகிறது.
சந்தை ரியாக்ஷன்
இந்தியாவின் பெஞ்ச்மார்க் NSE நிஃப்டி 50 இன்டெக்ஸ் தொடர்ந்து மூன்று நாட்களில் 0.6% சரிந்து, 15 நாளின் குறைவான அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. இதற்கிடையில், மற்ற ஆசிய பங்குச்சந்தைகள் முன்னேறியுள்ளன. ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் டர்ன்ஓவர் டிசம்பருக்குப் பிறகு மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது. கௌதம் அதானியின் குழுமத்தின் பங்குகள் கூட, மோடிக்கு நெருக்கமானதாகக் கருதப்பட்டு, விலை இறக்கத்தை சந்தித்தன.
முடிவாக
தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்த இந்திய பங்குச்சந்தை தேர்தலை ஒட்டி பயத்தினால் சிறிது சிறிதாக இறக்கத்தை சந்தித்து வருகிறது . பங்குகளின் அடிப்படை வலுவாக உள்ளதால் தேர்தலுக்கு பிறகு அந்நிய முதலீடுகள் பெருமளவு இந்தியாவை நோக்கி வரலாம் என்று சொல்கிறார்கள் .
ஆளும் பாஜக அமோக வெற்றியைப் பெறுமா அல்லது எண்ணிக்கை குறையுமா? காலம் மட்டுமே சொல்லும், ஆனால் இப்போதைக்கு, VIX Index (பயம் அளவீடு) ஒரு முக்கிய குறிகாட்டியாக உள்ளது.