127 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய நிறுவனமான கோத்ரேஜ் குழுமம், தங்கள் வியாபாரங்களை பிரிப்பதாக ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. குடும்ப ஒப்பந்தத்தின் மூலம், குழுமத்தின் அமைப்பு மற்றும் உரிமையை மறுவரையறை செய்ய உள்ளார்கள். முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்:
கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்: ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் தலைமையில் இந்நிறுவனம் இயங்கும். இதில் “கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்”, “கோதரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்”, “கோத்ரேஜ் ப்ரொபர்டீஸ்”, “கோத்ரேஜ் அக்ரோவெட்”, “அஸ்டெக் லைஃப் சயன்சஸ்” போன்ற பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அடங்கும்.
கோத்ரேஜ் & போய்ஸ் கம்பெனி: ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் தலைமையில் இயங்கும் பட்டியலிடப்படாத நிறுவனம். இது கோத்ரேஜ் & போய்ஸ் Manufacturing கம்பெனி மற்றும் அதன் துணை நிறுவனங்களான கோத்ரேஜ் ஹோல்டிங் & கோத்ரேஜ் இன்போடெக் மற்றும் பிற நிறுவனங்களை உள்ளடக்கியது. இவை விண்வெளி, விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இயங்குகின்றன.
மும்பையில் 3,400 ஏக்கர் பிரதான நிலம் உட்பட குறிப்பிடத்தக்க நில வங்கியை கோத்ரேஜ் & போய்ஸ் பெறும்.
ஆகஸ்ட் 2026 இல், ஆதி கோத்ரேஜின் மகனான பைரோஜ்ஷா கோத்ரேஜ் (Pirojsha Godrej), நாதீர் கோத்ரேஜுக்குப் பின் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்பார்.
பட்டியலிடப்படாத நிறுவனத்திற்கு புதிய சிந்தனைகளை வழங்கும் வகையில், ஜாம்ஷெட் கோத்ரேஜ், கோத்ரேஜ் & போய்ஸ் நிறுவனத்திற்கு தலைமை தாங்குவார்
இரு குழுமங்களும் தங்கள் பாரம்பரியப்படி கோத்ரேஜ் பிராண்டை தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பங்கு விலைகள் உடனடி ஏற்ற இறக்கமடைந்தன. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் ப்ரொபர்டீஸ் விலை குறைந்தது, அதே சமயம் கோத்ரேஜ் அக்ரோவெட் விலை உயர்ந்தது.
இந்த வரலாற்று முடிவின் நீண்டகால தாக்கங்களை முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சரி இதற்கு முன்னர் சில குறிப்பிடத்தக்க பிரிவுகள் மற்றும் இணைப்புகளின் போது பங்குதாரர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைப் பார்ப்போம்:
பிர்லா குழுமம்: அதித்யா பிர்லா குழுமம் மற்றும் பிர்லா கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்களின் பங்குதாரர்களும் இந்த பிரிவிலிருந்து லாபம் அடைந்தனர்.
அதித்யா பிர்லா குழுமம் அதன் வியாபாரத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியது , இதன் மூலம் பங்குதாரர் மதிப்பு அதிகரித்தது.
சிமெண்ட் மற்றும் பிற தொழில்களில் கவனம் செலுத்திய பிர்லா கார்ப்பரேஷன், அதன் முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியது.
பஜாஜ் குழுமம்: பஜாஜ் ஆட்டோ மற்றும் பஜாஜ் பின்சர்வ் பங்குதாரர்கள் பாசிட்டிவான முடிவுகளை அனுபவித்தனர்.
பஜாஜ் ஆட்டோ, ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு, பங்குதாரர்களுக்கு லாபம் அளித்தது.
நிதி சேவைகளில் கவனம் செலுத்திய பஜாஜ் பின்சர்வ், அந்த துறையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை ஈர்த்தது.
அம்பானி குடும்பம்: பிரிவின் தாக்கம் பங்குதாரர்கள் மீது கலவையான விளைவுகளை ஏற்படுத்தியது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), பெட்ரோகெமிக்கல், சுத்திகரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் முன்னணி நிறுவனமாக மாறி, அதன் பங்குதாரர்களுக்கு லாபம் அளித்தது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழுமம் சவால்களை எதிர்கொண்டது, இது அதன் பங்கு விலைகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதித்தது.
ஜிண்டால் குழுமம்: JSW குழுமம் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட் (JSPL) ஆகிய இரு நிறுவனங்களின் பங்குதாரர்களும் வேறுபட்ட வளர்ச்சிப் பாதைகளை கண்டனர்.
JSW குழுமம் வெற்றிகரமாக பல்வகைப்படுத்தப்பட்டு (Diversified), அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
ஜேஎஸ்பிஎல் சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டது, ஆனால் ஸ்டீல் மற்றும் மின்சாரம் துறைகளில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
ITC லிமிடெட்: ITC மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) பங்குதாரர்கள் வேறுபட்ட வளர்ச்சிகளை கண்டனர்.
IHCL தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களை நிர்வகித்து வந்தது.
அதே சமயத்தில் ITC யானது, FMCG, புகையிலை மற்றும் வேளாண்மை வணிகங்களில் தன்னை விரிவுபடுத்தியது.
முடிவாக :
"மற்ற சில குடும்பப் பிரிவினைகளுடன் ஒப்பிடுகையில், கோத்ரேஜ் சொத்துக்களில் பிளவு மிகவும் கண்ணியமான முறையில் நடந்தது, குடும்ப உறுப்பினர்கள் பொதுவெளியில் எதையும் விவாதிக்கவில்லை. அந்த அளவிற்கு, முடிவுகள் எட்டப்பட்டுள்ளன, மேலும் கோத்ரெஜ் நிறுவனத்தில் எந்த நிறுவனத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதில் தெளிவு உள்ளது, இப்போது அவரவர் கையாளும் வணிகங்களின் மீது கவனம் திரும்பும்" என்று பங்கு சந்தை அனலிஸ்ட் பாலிகா கூறுகிறார்.
இவ்வாறு ஒரு குழுமம் பிரியும் போது, யார் அதை மேலாண்மை செய்ய போகிறார்கள் என்று கவனித்து முதலீட்டு முடிவுகளை மேற்கொள்வது நல்லது.