இந்தியாவில் 2017-க்கு முன்பெல்லாம் மாதத்திற்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் விலை நள்ளிரவு ஏறுவது தொடர்பான செய்தி வெளியானவுடனே என பெட்ரோல் பங்கை நோக்கி வாகனத்தை விடுவார்கள் மக்கள். ஆனால், இன்று நிலை என்ன?
இன்று பெட்ரோலின் விலையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று பலருக்கும் தெரியாது. தினம் தினம் விலை நிர்ணயம் என்ற போக்கு மக்களுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. பைசாக்களில் ஏறும், இறங்கும் விலை குறித்த கவனிப்பு மக்களிடையே இல்லை. ஆனால், வழக்கமான விலை உயர்வே தற்போது இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதித்த கூட்டம் தற்போது குறைந்துவிட்டது. இமாலய உயர்வு என்ற நிலை சென்றாலொழிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
விலை மாற்றம் தினம்தோறும் என்ற அறிவிப்புக்கு பின்னான நிலை இதுதான். இந்த விலை நிர்ணயம் தினம் தோறும் என மாறிய கதையை கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வோம். அதாவது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்பது மத்திய அரசின் கைகளில் இருந்தது. 2010-ம் ஆண்டு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்தது மத்திய அரசு. பின்னர் 2014-ம் ஆண்டு டீசல் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்தது. அப்போது மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வெளியிட்டார்கள் எண்ணெய் நிறுவனத்தினர்.
அதன்பின்னர் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை தினம் தோறும் மாறுபடுகிறது. நாங்கள் மாதத்துக்கு இருமுறை விலை நிர்ணயம் எப்படி செய்ய முடியும் எனக் கூறி விலை நிர்ணயத்தை தினம்தோறும் கொண்டு வந்தார்கள். இந்த தகவலை தற்போது கூறுவதன் நோக்கம் பெட்ரோல், டீசல் விலைக்காக அல்ல. எரிவாயு சிலிண்டருக்காக.
மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டது சமையல் எரிவாயு விலை. அதெல்லாம் அப்போது. கடந்த டிசம்பரில் மாதத்திற்கு இருமுறை விலையை நிர்ணயம் செய்தார்கள். மாதத்தின் தொடக்கத்திலும், மாதத்தின் இறுதியிலும் விலை வெளியானது. ஆனால், அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த மாதம், அதாவது பிப்ரவரி மாதம் 3 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100 உயர்ந்துள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் ரூ.25 அதிகரிப்பு, பிப்ரவரி 15ல் ரூ.50 அதிகரிப்பு, இன்று பிப்ரவரி 25-ல் ரூ.25 அதிகரிப்பு. ஆக மொத்தமாக ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரிப்பு.
மாதத்திற்கு ஒருமுறை என்பது மாறி, மாதத்திற்கு இருமுறை என்பதும், இந்த மாதம் 3 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எதன்படி என தலையை பிய்த்துக்கொள்கின்றனர் பொதுமக்கள். இது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்ற அதே பார்முலாவுக்குள் சத்தமில்லாமல் செல்கிறதா என்றும் கேள்வியை எழுப்புகின்றனர். அதாவது, சர்வதேச சந்தை மற்றும் ரூபாய் ஏற்ற இறக்கத்தை பொறுத்து, வாரம் ஒருமுறை எல்பிஜி விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் சரிவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன. இது உறுதிபடுத்தப்படாத தகவல்தான் என்றாலும் இதற்கான சாத்தியம் உண்டு. தற்போது 3 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டதும் அதற்கான முன்னேற்பாடாகவே தெரிகிறது.
அதாவது, சத்தமில்லாமல் வாரம் வாரம் விலை நிர்ணயம் என்பதை அமல்படுத்தும் புள்ளியை நோக்கிச் செல்கின்றனவா எண்ணெய் நிறுவனங்கள் என கோபத்தில் கொந்தளிக்கின்றனர் மக்கள். அப்படி நடந்தால் என்னவாகும்?
நாம் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசிய கதைதான் நடக்கும். எல்பிஜி விலை நிர்ணயம் வழக்கமான ஒன்றாகிபோய் அது குறித்து மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள்.
மாதத்திற்கு இருமுறை என்றாலே, சிலிண்டர் புக் செய்யும் போது ஒரு விலை, வந்திறங்கும் போது ஒரு விலை என்ற குழப்பம் வருகிறது. மானியம் என சொல்லப்பட்டாலும், மானியம் சரியாக வங்கிக் கணக்கில் ஏறுகிறதா? விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப அதில் அப்டேட் செய்யப்படுகிறதா என்பதை எத்தனை குடும்பங்கள் கவனிக்கின்றன? இப்படி இருக்க வாரம் வாரம் விலை நிர்ணயம் என்பது மானியம் என்பதிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே கருதுகின்றனர் பொதுமக்கள். விலை நிர்ணயம் முறையை நெறிப்படுத்த வேண்டும், அது தொடர்பான அறிவிப்பை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.
- முருகதாஸ்