நாடெங்கும் கடந்த ஏப்ரலில் விலைவாசி கடுமையாக அதிகரித்திருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அது குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள்...
தேசிய அளவில் பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் துறை மாதந்தோறும் வெளியிடுகிறது. இதில் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம் 7.79 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரி 7.79% ஆக இருந்தாலும் இது கேரளாவில் 5.08 சதவிகிதமாகவும் தமிழகத்தில் 5.37 சதவிகிமாக மட்டுமே உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் அதிகளவில் விற்பனையாகும் பொருட்களுக்கான விலை குறைவாகவே உயர்ந்துள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சில பொருட்களுக்கு விலை குறையவும் செய்துள்ளது. உதாரணமாக அரிசியின் விலை ஓராண்டில் கிலோவுக்கு சுமார் 5 ரூபாய் குறைந்து சராசரியாக 52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உளுந்தம்பருப்பின் விலை 128 ரூபாயில் இருந்து 102 ரூபாயாக குறைந்துள்ளது. ஓராண்டில் துவரம் பருப்பு விலை 16.4% குறைந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை பிற மாநிலங்களில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடலை எண்ணெய் 187 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
போக்குவரத்திற்கு ஆதாரமாக திகழும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தபோதும் தமிழகத்தில் அதன் தாக்கம் குறைவாக உள்ளன. மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் இல்லாததால் அரசுப் பேருந்துகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 40 சதவிகிதத்தில் இருந்து 61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது பெட்ரோல் விலையேற்றத்தின் தாக்கம் குறைய ஒரு காரணம் என கருதப்படுகிறது.
ஒமைக்ரான் வகை கொரோனா அலை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் நுகர்வு தமிழகத்திலும் கேரளத்திலும் கணிசமாக குறைந்ததும் அதுவும் விலைவாசி கட்டுப்பாட்டில் இருப்பதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு முன் தேசிய பணவீக்க சராசரியை விட தமிழகம் மற்றம் கேரளாவில் பணவீக்கம் அதிகம் இருந்ததும் தொற்றுக்கு பின்னர் இது தலைகீழ் மாற்றம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.