கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட தங்களது தொழிலே இன்னும் முழுமையாக மீளாதா சூழலில், இப்போது கொரோனாவின் 2-வது அச்சுறுத்தலால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ என்று லாரி உரிமையாளர்கள் கவலையுடன் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் பல தொழில்களை பாதித்தது. குறிப்பாக, சரக்குப் போக்குவரத்தில் முதுகெழும்பாக விளங்கும் லாரி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், பல்லாயிரக்கான சரக்கு வாகனங்கள் போதிய லோடு இல்லாமல் நிறுத்திவைக்கபட்டன. இதனால் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் போதிய வேலையினமையால் பாதிக்கப்பட்டனர்.
மேலும், வரலாறு காணாத டீசல் விலை உயர்வு, தொடர்ந்து உயரும் காப்பீட்டு கட்டணம், சுங்க கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தொழில் நலிவடைந்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், ஒரு சில மாநிலங்கள் பொது முடக்கத்தையும் அறிவித்துள்ளன. பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபட்டால், லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என லாரி உரிமையாளர்கள் அச்சமடைகின்றனர். இதனால், லாரி உரிமையாளர்கள் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியாமலும், ஓட்டுனர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர்.
கடந்தாண்டு கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் லாரிகளை விற்று விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியதுதான். கடந்த ஆண்டே 70 சதவீத லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால் லாரி தொழிலே முடங்கி விடும்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சரக்குகளை யாரும் பணம் கொடுத்து வாங்க இயலாத நிலை உள்ளது. அமெரிக்க அரசு தொழில் துறைக்கு உதவியது போல் மத்திய, மாநில அரசுகளும் உதவி செய்து தொழில்களை காக்க வேண்டும்" என்கிறார் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ்.
"நான் 30 வருடத்திற்கு மேலாக லாரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். தற்போது உள்ள சூழ்நிலையைபோல் முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. கடந்தாண்டு கொரோனா பாதிப்பால் போதிய வருமானம் இன்றி தவித்த நிலையில் குடும்ப செலவு, வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். தற்போது லாரிகள் ஓட துவங்கியதால் பழைய நிலைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு பொதுமுடக்கம் ஏற்பட்டால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்" என்றார் நாமக்கல்லை சேர்ந்த லாரி உரிமையாளரும் ஓட்டுனநருமான செல்வராஜ்.
- எம்.துரைசாமி