இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2.5 லட்சத்திற்கும் மேலானவர்கள் புதிதாக இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் அளவிலான ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு மாதிரியான விதிமுறைகள் அமலில் உள்ளன.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. டெல்லியில் 7 நாட்கள் ஊரடங்கு என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்திலும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இந்நிலையில் இந்த உள்ளூர் அளவிலான ஊரடங்கு, பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது, இந்தியாவைச் சேர்ந்த தரநிலை - பகுப்பாய்வு நிறுவனமான க்ரைசில் (CRISIL).
“ஊரடங்கு நடைமுறை பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளதால் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் பிரதான காரணிகளான மின் நுகர்வு மற்றும் ஜிஎஸ்டி இ-வே பில்களில் லேசான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்காலிகமா அல்லது தொடருமா என்பது போக போகத்தான் தெரியும்” என CRISIL தெரிவித்துள்ளது.