ஜனவரி மாதம் தொடங்கினாலே, சம்பளதாரர்கள் மத்தியில் வருமான வரி மற்றும் வரி விலக்குகள் பற்றிய பல சந்தேகங்கள் எழத்தொடங்கும். காரணம், அநேக நிறுவனங்கள் நிதி ஆண்டின் கடைசிக் காலாண்டில் வருமான வரியைக் கணக்கிட்டு, சம்பளத்தில் பிடித்தம் செய்யத் துவங்கும். அதிலும் பலருக்கு வருமான வரியைச் சேமிக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்ற விழிப்புணர்வு இல்லாதது பெரும் சோகம்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் வரி ஏய்ப்புக்கும் வரி சேமிப்புக்கும் கூட நம்மில் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. பொதுவாகச் சொல்வதென்றால், வருமானக் கணக்கை முன்னுக்குப் பின் முரணாகக் காண்பித்து, சட்டப்படி நாம் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனலாம். அதுவே, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வரிவிலக்கை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் வருமான வரியைக் கணிசமாகக் குறைப்பது அல்லது முழுமையாகத் தவிர்ப்பது வரிச்சேமிப்பு ஆகும்.
வருமான வரியை மிச்சப்படுத்த அரசே நமக்கு வரிவிலக்குகள் அளிக்கிறது. அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது நமது உரிமையாகும். புதிய வரிமுறையில் வரிக்குட்பட்ட வருமானம் ரூ.7 லட்சத்திற்குள் இருந்தால், நிலைக்கழிவு போக வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டு ஒருவர் வருமான வரி செலுத்தத் தேவையிருக்காது. எனினும், சம்பளதாரர்கள் பலருக்கும் பிடித்தமானதாக இருப்பது பழைய வரிமுறையே ஆகும். காரணம், இதில் எண்ணற்ற வரிவிலக்குகள் உள்ளன. பழைய வரிமுறையின் கீழ் வரியைச் சேமிக்கும் வழிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்!
நிலைக்கழிவு என்பது, சம்பளதாரர்கள் அனைவரும் எவ்வித முதலீடோ அல்லது செலவினத்திற்கான ஆதாரமோ இன்றி வரிக்குட்பட்ட வருமானத்திற்கு எதிராக ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.50,000 வரை வரிவிலக்குப் பெறும் ஒரு வழி. சம்பளதாரர்கள் அனைவருக்குமே இந்த வரிவிலக்கு கிடைக்கும்.
வருமான வரிச்சட்டத்தின் கீழ், மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிரபலமான விலக்குகளில் ஒன்று இந்த பிரிவு 80C ஆகும். இப்பிரிவின் கீழ் சம்பளதாரர் ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்குப் பெறலாம். நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல், 1-ம் தேதி முதல் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச், 31-ம் தேதி வரை இப்பிரிவின் கீழ் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு வரிவிலக்குப் பெறமுடியும்.
இப்பிரிவின் கீழ் வரும் பிரபலமான வரிச்சேமிப்பு முதலீடுகளின் பட்டியல் கீழே! ஆயுள் காப்பீடு பிரீமியம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு (Provident Fund)
செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி திட்டம்)
குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம்
வீட்டுக்கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் அசல்
வரி சேமிப்பு நிலையான வைப்பு (Tax-saving Fixed Deposit) - ஐந்து வருட லாக்-இன் பீரியட் கொண்டவை
அஞ்சல் அலுவலக நேர வைப்புகள் - ஐந்து வருட லாக்-இன் பீரியட் கொண்டவை;
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)
பங்குச்சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம் (ELSS)
ஓய்வூதியத் திட்டங்கள்
பிரிவு 80C-ன் கீழ் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற்றபின்னரும், பிரிவு 80CCD (1B)-ன் கீழ் ஒருவர் மேலும் ரூ.50,000 வரை வரியை சேமிக்க முடியும். இதற்கு தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ரூ.50,000 வரை ஒருவர் முதலீடு செய்யவேண்டும். ஓய்வுக்காலத்துக்கான நிதித் தேவையைக் குறைவில்லாமல் வழிசெய்வதோடு, வரிசார்ந்த பலன்களும் இதில் உண்டு.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை நிறையபேர் உணர்ந்துள்ளனர். நாம் மருத்துவக் காப்பீட்டிற்காக செலுத்தும் பிரீமியம் (GST உள்பட), நோய்த் தடுப்பு உடல் பரிசோதனை ஆகியவற்றிற்கு இந்தப் பிரிவின் கீழ் வரிவிலக்குப் பெறமுடியும்.
60 வயதிற்குக் குறைவான சம்பளதாரர் தனக்கு, தன் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுக்கு இப்பிரிவின் கீழ் ரூ.25,000 வரை வரிச்சலுகை பெறலாம்.
இதுமட்டுமல்லாமல், 60 வயதிற்குக் குறைவான தன் பெற்றோருக்காகச் செலுத்தும் மருத்துவக் காப்பீடு, உடல் பரிசோதனை செலவுகள் ஆகியவற்றிற்கு மேலும், ரூ.25,000 வரை வரிச் சலுகை பெறலாம். ஒருவேளை வரிதாரரின் பெற்றோரில் ஒருவர் 60 வயது தாண்டிய மூத்த குடிமகன் எனில் இச்சலுகை வரம்பு ரூ.50,000 ஆகும்.
வங்கி சேமிப்புக் கணக்கு, கூட்டுறவு வங்கிக்கணக்கு மற்றும் அஞ்சல் அலுவலகக் கணக்கில் வரும் மொத்த வட்டிக்கு (அதிகபட்சமாக ரூ.10,000 வரை) வரி விலக்குப் பெறமுடியும். இதில் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) மற்றும் தொடர் வைப்புத்தொகைகளுக்கான (Recurring Deposit) வட்டிகள் இப்பிரிவின் கீழ் வரிவிலக்குகளுக்குத் தகுதிபெறாது.
மூத்த குடிமக்கள் இப்பிரிவின் கீழ் வைப்புத்தொகையின் மீதான வட்டி வருமானத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரிவிலக்குப் பெறமுடியும்.