ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வரும் மார்ச் மாதத்தில் 10 கோடியை எட்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தைநிலவரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜேபி மோர்கன் நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய தொலைதொடர்பு சேவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கால்பதித்த ஜியோ நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்தில் 5.2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மார்ச் மாதத்தில் 10 கோடியை எட்டிய பின்னர், வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து ஜியோ நிறுவனம் பரிசீலக்கும்.ரூ.149 முதல் ரூ.449 என்ற கணக்கில் திட்டங்களை அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கும் ஜியோ, ஏப்ரலுக்கு பின்னர் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து புதிய திட்டங்களை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொருளாதாரரீதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் களமிறங்கியுள்ள ஜியோ, இந்திய தொலைதொடர்பு சந்தையில் குறைந்தவிலையில் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.