பணவீக்கம் அதிகமாக உள்ளதால்தான் தற்போதுள்ள வட்டி விகிதங்கள் குறைய மறுக்கின்றன. ஆனால், இதை தாண்டி வட்டி விகிதங்கள் குறையாது என சொல்வதற்கில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான், சிக்கலுக்கு காரணம். அதனால், இந்தியாவில் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை. எனவே, பணவீக்கம் அதிகரிப்பதால், வட்டி விகிதங்களில் மாற்றம் வராமல் முடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை எப்போது.. எப்படி மாறும் என சொல்வதற்கில்லை. அதன் விலையேற்ற.... இறக்கத்தைக் கணிக்க முடியவில்லை. பாரம்பரிய பொருளாதார அறிவு மட்டுமே, இன்று கச்சா எண்ணெய் விலை போக்கைக் கணிக்க உதவவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 28 அமெரிக்க டாலரில் இருந்தது, தற்போது 70 டாலர் என உயர்ந்துள்ளது.
எண்ணெய் வள நாடுகளின் கொள்கை முடிவுகள்தான் சர்வதேச சந்தை விலையை நிர்ணயிப்பதாக உள்ள நிலையில், பொருளாதாரத்தின் போக்கைக் கணிப்பதில் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இதனால் வட்டி விகிதங்களில் மாற்றம் வராது; இன்னும் குறையாது என சொல்வதற்கில்லை. வட்டி விகிதங்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு வங்கிகளிடம் உள்ளது. அவற்றின் செயல்பாடு, கடமை போன்றவற்றில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு செய்வதற்கு ஒன்றுமில்லை" எனவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.