ஊதிய உயர்வுக் கோரி வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துகின்றனர்.
இந்திய வங்கிகள் சங்கத்திற்கும், ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே கடந்த 5ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 2 சதவிகித ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்ததை ஊழியர் சங்கத்தினர் ஏற்கவில்லை. ஜந்தன் வங்கிக்கணக்கு திட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி என அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஓய்வின்றி பணியாற்றியதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரை போதுமானதாக இல்லை எனக்கூறி, நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.