ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய ஃபண்ட் வெளியீடுகளை அறிமுகம் செய்து வருகின்றன. 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய வெளீயிடுகள் மூலம் நிதி திரட்டி இருக்கின்றன. தற்போது பிஸினஸ் செய்திதாள்களை திறந்தாலே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் புதிய வெளியீட்டு அறிவிப்புகளை அதிகம் பார்க்க முடிகிறது. தவிர பல நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதியை பெற்றிருக்கின்றன. அதனால் புதிய ஃபண்ட் வெளியீடுகள் மேலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் புதிய ஃபண்ட் வெளியீடுகள் குறித்து இரு விதமான தவறான நம்பிக்கைகள் உள்ளன. புதிய ஃபண்ட்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்னும் கருத்தும் இருக்கிறது. அதே சமயம் புதிய ஃபண்ட் முதலீடுகள் கூடவே கூடாது என்று கருதும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். முதலீடு செய்வதற்கும் காரணம் இருக்கிறது. முதலீடு செய்யக்கூடாது என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. யார் முதலீடு செய்கிறார்கள் என்பதை பொறுத்து காரணங்கள் மாறுபடும்.
ஏன் கூடாது?
ஏன் வேண்டாம் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். புதிய ஃபண்ட் வெளியீட்டில் முதலீட்டாளர்கள் விரும்புவதற்கு ஒரே காரணம் 10 ரூபாயில் யூனிட் கிடைக்கிறது. அதனால் அதிகம் லாபம் கிடைக்கும் என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு யூனிட் பத்து ரூபாய்க்கு கிடைத்தாலும் சரி, 100 ரூபாய்க்கு கிடைத்தாலும் சரி எத்தனை சதவீதம் உயர்கிறது என்பதுதான் முக்கியமே தவிர யூனிட் மதிப்பு அல்ல.
ஏற்கெனவே செயல்படும் ஃபண்ட்களுக்கு ஒரு செயல்பாடுகள் குறித்து மதிப்பிட முடியும். ஆனால் புதிதாக செயல்படும் ஃபண்ட்களுக்கு என டிராக் எதுவும் இருக்காது என்பதால் புதிய ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பது ரிஸ்கானதுதான். புதிய ஃபண்ட்கள் சிறப்பாக செயல்படலாம் அல்லது மோசமாக செயல்படலாம் என அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.
அதேபோல ஏற்கெனவே செயல்படும் ஃபண்டாக இருந்தால் செலவு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். ஆனால் புதிய ஃபண்ட்களுக்கு மார்கெட்டிங்கு அதிகம் செலவாகும். அதே சமயம் திரட்டப்படும் ஃபண்ட் குறைவாக இருந்தால் செலவு விகிதம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் புதிய ஃபண்ட்கள் முதலீடு செய்வது என்பது கொஞ்சம் காஸ்ட்லியானது என்பதனையும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏன் என்எப்ஓவில் முதலீடு செய்யலாம்?
ஒரே பிரிவில் மீண்டும் ஒரு ஃபண்டினை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய மாட்டார்கள். உதாரணத்துக்கு ஒரு ஃபண்ட் நிறுவனத்தில் லார்ஜ் கேப் ஃபண்ட் இருந்தால் மீண்டும் அதே ஃபண்டினை அறிமுகம் செய்ய மாட்டார்கள். அதனால் தற்போது புதுப்புது பிரிவுகளில், தீம்களில் புதிய ஃபண்ட்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றன. அதனால் புதிய பிரிவுகளில் கவனம் செலுத்துவதற்காக முதலீடு செய்யலாம்.
மேலும் தற்போது புதிதாக உருவான சில ஃபண்ட் நிறுவனங்கள் சந்தையில் சிறப்பான செயல்பாட்டினை கொடுத்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் அனுபவம் பெற்ற பல ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் தொடங்க அனுமதி பெற்றிருக்கின்றன. இதனால் ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் காரணமாக முதலீடு செய்யலாம். சமீபத்தில் சில புதிய ஃபண்ட்கள் அபரிவிதமான லாபத்தை கொடுத்திருக்கின்றன. சில வகையான முதலீட்டாளர்களுக்கு `லாக் இன்’ இருப்பது நல்லதாக அமையும்.
சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி அதிகம் கவலைப்படும் முதலீட்டாளர்கள் குளோஸ்ட் எண்டட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். இதுபோல என்.எப்.ஒவிஒ. முதலீடு செய்ய சில காரணங்களும் இருக்கின்றன.
என்ன செய்யலாம்?
நீங்கள் புதிய முதலீட்டாளர் அல்லது ஆரம்ப கால முதலீட்டாளர் என்றால், ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் ஃபண்ட்களாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். உங்களுக்கு அதுவே சிறந்தது. இதுவே நீங்கள் அனுபவம் மிக்க முதலீட்டாளர்கள் எனும் பட்சத்தில் உங்கள் போர்ட்ஃபோலியோ பரவலுக்கு புதிய ஃபண்ட் ஏற்றது என்றால் அதில் கவனம் செலுத்தலாம். அனுபவம் மிக்க முதலீட்டாளர்கள் புதிய ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர், கொள்கை உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் டிராக் இல்லாவிட்டாலும் முதலீடு செய்யலாம்.
ஆனால் புதிய முதலீட்டாளர்கள் என்.எப்.ஓவில் இருந்து விலகி இருப்பதே நல்லது.
முந்தைய செய்தி> பணம் பண்ண பிளான் B -22: முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை