தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது. டீசல் விலையும் 100 ரூபாயை நோக்கி உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சிவகங்கை, அரியலூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது.
20 மாவட்டங்களில் 100 ரூபாயை கடந்துள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசு விலை உயர்ந்து 99 ரூபாய் 19 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் ஒரு லிட்டர் 34 காசு விலை அதிகரித்து 93 ரூபாய் 23 காசுக்கு விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மத்திய, மாநில அரசுகளுக்கான பங்கு என்ன?
2014 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஒரு லிட்டர் பெட்ரோலில், மத்திய அரசுக்கான பங்கு 6 ரூபாய் 45 காசாக இருந்தது. அனைத்து மாநிலங்களுக்குமான பங்கு 3 ரூபாய் 03 காசாக இருந்தது. 2017-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசுக்கான பங்கு 17 ரூபாய் 5 காசாகவும், மாநிலங்களுக்கான பங்கு 3 ரூபாய் 98 காசாகவும் இருந்தது. 2021ல், மத்திய அரசுக்கான பங்கு 32 ரூபாய் 33 காசுகளாகவும், அனைத்து மாநிலங்களுக்கான பங்கு 57 காசாகவும் இருக்கிறது. இதேபோல 2014 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு பங்கு 2 ரூபாய் 43 காசாகவும், அனைத்து மாநிலங்களுக்கான பங்கு 1 ரூபாய் 14 காசாகவும் இருந்தது. 2017ல் 12 ரூபாய் 57 காசாகவும், மாநிலங்களுக்கான பங்கு 4 ரூபாய் 76 காசாகவும் இருந்தது.
இதே 2021-ல் மத்திய அரசுக்கான பங்கு 31.06 காசாகவும், மாநிலங்களுக்கான பங்கு 074 காசாவும் உள்ளது. பெட்ரோல், டீசலில் மத்திய அரசுக்கான பங்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், மாநிலங்களுக்கான பங்கு கடந்த 7 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபுறம் எனில், மத்திய, மாநில அரசுகளின் வரியும் விலை உயர்வுக்கான காரணமாக நீடிக்கிறது.