இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ5,686 கோடியாக இருக்கிறது. வருமானம் 22.7 சதவீதமாக உயர்ந்து ரூ.32,276 கோடியாக இருக்கிறது.
இறுதி டிவிடெண்டாக ரூ.16 வழங்குவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இறுதி டிவிடெண்டையும் சேர்த்து கடந்த நிதி ஆண்டில் மொத்தம் ரூ.31 டிவிடெண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் ரூ.13000 கோடி அளவுக்கு டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.
கடந்த மார்ச் முடிவில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3.14 லட்சமாக இருக்கிறது. மார்ச் முடிவில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 39.6 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் புதிதாக 85,000 பணியாளர்களை இன்ஃபோசிஸ் இணைத்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 50,000 பணியாளர்களுக்கு மேல் வேலைக்கு எடுக்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் 27.7 சதவீதமாக இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் வெளியேறுபவர் விகிதம் 17 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவில் எங்களுக்கு 100க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர், ரஷ்யாவில் உள்ள பணிகளை மற்ற நாடுகளுக்கு மாற்றிவிட்டோம் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 1 மில்லியன் டாலர் அளவுக்கு செலவிட திட்டமிட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் தெரிவித்திருக்கிறார்.