முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின், லாபத்தைக் அதிகரித்து காட்டுவதற்காக அதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி முக்கிய தகவல்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த இரண்டு காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்கும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராயும் நிதி மோசடிக்காக சில தகவல்களை மறைத்துள்ளனர் என அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே குற்றம்சாட்டியுள்ளனர். சில நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் தொடர்பான தகவல்களை தவறாகவும், திரித்தும், மறைத்தும் பங்குச் சந்தைகள் உள்ளிட்ட சட்டரீதியான அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் தலைமை அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மோசடிகளை ஆடிட்டர் குழுவுக்கும், இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும் கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் ஆகியோர் செய்த மோசடி தொடர்பாக மின்னஞ்சல் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் ஆதாரங்கள் கூட தங்களிடம் இருப்பதாக புகார் கூறியுள்ள ஊழியர்கள், தலைமை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை கடிதம் மூலமாக இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், புகார் கடிதத்துக்கு பதில் ஏதும் வராததால், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இருக்கும் Whistleblower Protection Programme அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் ஊழியர்களின் புகார் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் Whistleblower தற்போது விளக்கம் கேட்டுள்ளது. ஊழியர்களின் புகாரானது அமெரிக்கா வரை சென்றதை அடுத்து இந்த விவகாரத்தில் இன்ஃபோசிஸ் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள இன்ஃபோசிஸ் தரப்பு, '' இந்த புகார் எங்களது ஆடிட்டர் குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படும். மேலும் இந்த புகார் Whistleblower கொள்கைக்கு உட்பட்டு விசாரிக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்போசிஸ் தலைவர் நந்தன் நீலகேனி, ''தங்களிடம் புகார் ஆதாரங்களான மின்னஞ்சல் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனாலும் ஊழியர்களின் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்'' என தெரிவித்துள்ளார்.
(இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேனி)
ஏற்கெனவே சத்தியம் கம்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ச்சியை அதிகரித்து காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதனை நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் வளர்ச்சியை அதிகரித்து காட்டி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ள சம்பவம், மென்பொருள் நிறுவன உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.