ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், மேக்புக் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் மற்றும் மற்ற ஷோ ரூம் மூலமாக மட்டுமே பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கென பிரத்யேக விற்பனை நிலையம் தொடங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் பிகேசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இன்று திறந்து வைத்தார். ஆப்பிள் ஷோ ரூம் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், பாலிவுட் நடிகை நேஹா தூபியா ரவீனா டண்டன், மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
ஆப்பிள் பிகேசி ஷோரூம் மூலம், ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் நேரடியாக பெறலாம்.
அதோடு அந்த நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.