வர்த்தக பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தை துவக்கியவுடன் 387.96 புள்ளிகள் அதிகரித்து 32,995.28 புள்ளிகளையும், நிப்டி 113.45 புள்ளிகள் உயர்ந்து 10,321.15 புள்ளிகளையும் தொட்டது. சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 33,000 புள்ளிகளைக் கடந்து 33,117.33 மற்றும் நிப்டி 10,340.55 புள்ளிகளையும் தொட்டன. இதுவரை சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய சாதனையைப் படைத்துள்ளன. இதனால் இன்று எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு மட்டும் 24 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நிப்டியில் இடம் பெற்று இருக்கும் ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளின் பங்கு மதிப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு ரூ.2.11 லட்சம் கோடி உயர்த்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.