அமெரிக்காவில் சென்ற வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜூன் மாத பணவீக்கம் பற்றிய தகவல் வியாழக்கிழமையன்று வெளிவந்தது. முன்னதாக பெரும்பாலான வல்லுநர்கள் பணவீக்கம் எதிர்பார்ப்பைவிட உயரலாம் என்று கணித்த நிலையில், அது எதிர்பார்ப்பை விட குறைவாக வந்தது.
இது செப்டம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க ஃபெட் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்க வலு சேர்க்கும் என்று நம்பபட்டதால், தங்கத்தின் விலை உயர வழிவகுத்தது.
மேலும், சென்ற வாரம் பணவீக்க தகவல் வரும் முன்னமே ஃபெட் சேர்மன் பவல் பேசும் போது, அமெரிக்கா ஃபெட் வங்கி பணவீக்கம் 2% ஆக குறையும் வரை பொறுத்து இருக்க போவதில்லை எனவும், தக்க சமயம் வரும் போது வட்டி விகிதம் குறைக்கப்படும் எனவும் பேசினார். வட்டி குறைக்கப்படும் போது அது டாலரை வலுவிழக்க செய்யும், தங்கம் உயரும். வியாழக்கிழமைக்கு முன் வட்டி குறைப்பு மீதான வல்லுனர்களின் நம்பிக்கை 73% இருந்த நிலையில் இந்த தகவலுக்கு பிறகு 93% அதிகரித்தது.
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ்ல் ஏற்பட்ட சரிவு, அமெரிக்கப் பணவீக்கம் 3.30 சதவீதத்தில் இருந்து 3.0 சதவீதமாகக் குறைந்தது மற்றும் அமெரிக்க பாண்ட் யீல்டு சரிவு ஆகியவை உலகளவில் தங்கத்தின் விலை உயர காரணமாக இருந்தது.
வாராந்திர அடிப்படையில், விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகம் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் 0.80 சதவீதம் உயர்ந்து ஒரு மாத உயர்வைத் தொட்டது. உள்நாட்டு சந்தையில், ஆகஸ்ட் 2024 காலாவதிக்கான MCX தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 73,285 ஆக முடிந்தது. சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,411 ஆகவும், COMEX தங்கத்தின் விலை ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,416 ஆகவும் முடிந்தது.
இதற்க்கு முன்னர் தங்கம் விலை ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் $2400 லெவலை தாண்டினாலும் அங்கிருந்து இறக்கத்தையே சந்தித்தன. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய விலை உயர்வு கடந்த சில மாதங்களாக உச்ச விலையை தொட்டுவிட்டு பக்கவாட்டில் வர்த்தகமாகிறது. வட்டிவிகிதம் குறையும் போது விலை மீண்டும் சிறிது காலம் அதிகரிக்கலாம்.
இந்தியாவில் வரும் நாட்களில் தங்கம் விலை குறையும் பட்சத்தில் 10 கிராம் ₹72,200 முதல் ₹72,000 வரை முக்கிய சப்போர்ட் நிலையை கொண்டுள்ளது. விலை அதிகரிக்கும் பட்சத்தில் ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக, 10 கிராம் ₹73,300 என்ற நிலையை கொண்டுள்ளது, அது உடைத்து மேலே செல்லும் பட்சத்தில், தங்கம் 10 கிராமுக்கு ₹73,700 முதல் ₹74,200 வரை விலையேற்றத்தை சந்திக்கலாம் என டெக்னிக்கல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.