'தற்சார்பு இந்தியா' 3.0 தொகுப்பின் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட 'தற்சார்பு இந்தியா' 3.0 தொகுப்பின்படி, தற்போது வருமான வரி சட்டத்தின் 43 சி.ஏ. பிரிவு சர்க்கிள் ரேட் (முத்திரைத்தாள் மதிப்பு) மற்றும் ஒப்பந்த மதிப்புக்கு இடையில் வித்தியாசத்தை 10 சதவீதம் என கட்டுப்படுத்துகிறது.
வித்தியாச அளவை 10 சதவீதம் என்பதில் இருந்து 20 சதவீதம் என உயர்த்த (பிரிவு 43 சி.ஏ.வின் கீழ்) முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் தேதியில் இருந்து 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு, ரூ.2 கோடி மதிப்பு வரையிலான குடியிருப்பு கட்டடங்களின் முதன்மை விற்பனைக்கு மட்டும் இது பொருந்தும்.
இந்த வீடுகளை வாங்குவோருக்கு வருமான வரி சட்டம் 56 (2) (x) பிரிவின் கீழ் மேற்படி காலத்துக்கு, பின்தொடர்ச்சி சலுகையாக 20 சதவீதம் வரை அளிக்கப்படும்.
இதற்குத் தேவையான வருமான வரி சட்ட திருத்தம் செய்யப்படும். வீடு வாங்குவோர் மற்றும் கட்டுவோரின் சிரமங்களைக் குறைப்பதாகவும், விற்காமல் இருக்கும் வீடுகளை விற்பதற்கும் இது உதவிகரமாக இருக்கும்' என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.