கடலூரில் ரூ.400க்கு விற்கப்பட வேண்டிய வாழைத்தார்கள் ரூ.40க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை

கடலூரில் ரூ.400க்கு விற்கப்பட வேண்டிய வாழைத்தார்கள் ரூ.40க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை
கடலூரில் ரூ.400க்கு விற்கப்பட வேண்டிய வாழைத்தார்கள் ரூ.40க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை
Published on

கடலூரில் தீபாவளி விற்பனை அதிகம் இருக்குமென நினைத்து சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 20,000 வாழைத்தார்கள், மழை காரணமாக விற்கப்பட முடியாமல் அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 ரூபாய் முதல் 400 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய வாழைத்தார்கள் ரூ. 40, 50க்கு விலைபோனதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

கடலூர் உழவர் சந்தை எதிரே வாழைத்தார் அதிகளவு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக மலை கிராமமான ராமாபுரம் சத்தரம் பத்திரக்கோட்டை எஸ்.புதூர் வழிசோதனை பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விளையும் வாழைகள், கடலூர் உழவர் சந்தைக்கு தான் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த விதமான சுப நிகழ்ச்சிகளும் விழாக்களும் பெரியளவில் கொண்டாடப்படாததால், இப்பகுதியில் வாழை விற்பனையை அமோகமாக செய்ய முடியாமல் வாழை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடமும் விற்பனை சரியாக இல்லாததால், இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வருடம் வியாபாரம் சிறப்பாக இருக்குமென நினைத்து பல வியாபாரிகள் நம்பிக்கையுடன் சந்தைக்கு வந்துள்ளனர். அப்படி ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர் விவசாயிகள். ஆனால் கனமழையின் காரணமாக வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகளவில் வராதததால், 300 ரூபாய் 400 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய வாழைத்தார்கள் 40 ரூபாய், 50 ரூபாய்க்கு விலை போன சம்பவம் அறங்கேறியுள்ளது.

அதுவும் கொஞ்சம் வாழைத்தார்கள் மட்டுமே விற்பனையானது. மற்றபடி பல ஆயிரம் தார்கள் அப்படியே விற்காமல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை இல்லாமல் போன நிலையில், தற்போது கனமழையின் காரணமாக தங்களின் பணி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் வாழை விவசாயிகள். கடலூரில் வாழை விற்பனை போலவே மீன் சந்தையிலும் விற்பனை மந்தமாகியுள்ளது.

- ஸ்ரீதர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com