இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு முக்கியமான அடித்தளம் அமைத்துக்கொடுத்தது பிராண்ட் சாண்ட்ரோ. ஆனால் அந்த பிராண்ட் காரை தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது ஹூண்டாய்.
முதலில் 1998-ம் ஆண்டு சாண்ட்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதனைத்தொடர்ந்து பல புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சாண்ட்ரோ 2014-ம் ஆண்டு விலகிக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடந்து மீண்டும் 2018-ம் ஆண்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.3.9 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக சில மாடல் சாண்ட்ரா கார்களின் விலை 7 லட்சத்தை தாண்டியது. இது தவிர பிஎஸ் 6 பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டி இருக்கிறது என்பதால் உற்பத்தி செலவினை குறைக்க முடியவில்லை.
இந்த விலையில் சாண்ட்ரோ மாடல் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. மாதத்துக்கு 2000 கார்கள் என்பதே சவாலான சூழல்தான். அதனால் சாண்ட்ரோ மாடலை மீண்டும் நிறுத்தி இருக்கிறது ஹூண்டாய். கடந்த நிதி ஆண்டில் 23700 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த நான்கு ஆண்டுகளில் 1.46 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின.