கொரோனா பொதுமுடக்க காலத்தில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களது சொத்து மதிப்பை 26 சதவிகிதம் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் பிற்பாதிக்கு பிறகு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பலரையும் பொருளாதார ரீதியாக பின்தங்க செய்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் தங்களது சொத்து மதிப்பை 26 சதவிகிதம் கூட்டியுள்ளனர் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் அதிபர்கள். அந்த பட்டியலை HURUN இந்தியா நிறுவனவம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதிதாக 8 பேர் இணைந்துள்ளனர் எனவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியிலில் பாஜகவின் முக்கியஸ்தர், அரசியல் பிரமுகருமான மங்கள் லோதா முதலிடம் வகிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். சுமார் 39 சதவிகிதம் நடப்பு ஆண்டில் அவரது சொத்து மதிப்பு கூடியுள்ளது. அவரை தொடர்ந்து DLF நிறுவனத்தின் ராஜீவ் சிங் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு கடந்த முறையை காட்டிலும் இந்த முறை 45 சதவிகிதம் கூடியுள்ளது. அதோடு பங்குசந்தையில் DLF பெற்ற முன்னேற்றமும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் சொத்து மதிப்பில் சுமார் 70 சதவிகிதம் வளர்ச்சி பெற்ற சந்துரு Raheja இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 15 மாநிலங்களில் உள்ள 24 நகரங்களை தங்களது தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக மும்பையை பூர்வீகமாக கொண்டவர்கள் 31 பேரும், டெல்லியிலிருந்து 22 பேரும், பெங்களூருவிலிருந்து 20 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று பேர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நான்கு பேர் உள்ளனர். 36 வயதான ஆதித்யா சந்தக் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மிக இளம் வயதை சார்ந்தவர்.