மசாலா நிறுவனமான எம்.டி.ஹெச். நிறுவனத்தை எப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹெச்.யூ.எல் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. டெல்லியை தலைமையாக கொண்டு செயல்படும் எம்.டி.ஹெச். நிறுவனத்தின் நிறுவனர் தரம்பால் குலாதி கடந்த ஆண்டு மறைந்ததை அடுத்து அந்த நிறுவனத்தை ஹெச்.யூ.எல் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
60-க்கும் மேற்பட்ட புராட்க்ட்களை எம்டிஹெச் விற்பனை செய்கிறது. நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட பெரிய டீலர்களும் பல ஆயிரக்கணக்கான ரீடெய்ல் ஸ்டோர்களிலும் இந்த பிராண்ட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 டன் பொருட்களை உற்பத்தி செய்கிறது. கடந்த நிதி ஆண்டில் 1,191 கோடி ரூபாய் அளவுக்கு வருமானமும், ரூ.507 கோடி அளவுக்கு நிகர லாபமும் இந்த நிறுவனம் அடைந்திருக்கிறது. நிறுவனத்தின் லாப வரம்பு அதிகம் என்பதால் ஹெச்.யு.எல். இந்த நிறுவனத்தை பரிசீலனை செய்வதாக தெரிகிறது. இதுதவிர எம்டிஹெச் நிறுவனத்தின் வசம் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் சொத்துகளும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியா முழுவதும் செயல்பட்டு வருவதால் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை கொடுத்து ஹெச்.யு.எல் வாங்க இருப்பதாக தெரிகிறது.ஆனால் இந்த தகவலை எம்டிஹெச் நிறுவனம் மறுத்திருக்கிறது. ஆதாரமற்ற செய்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. அதே சமயம் நிறுவனத்தின் பாரம்பரியத்தை தொடர இருக்கிறோம் என்றும் அறிவித்திருக்கிறது.
மற்றொரு முக்கிய எப்.எம்.சி.ஜி நிறுவனமான ஐடிசி 2020-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த சன்ரைஸ் பூட்ஸ் என்னும் ஸ்பைசஸ் நிறுவனத்தை வாங்கியது. அதனால் அதே பிரிவில் செயல்படும் எம்.டி.ஹெச். நிறுவனத்தை வாங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து ஹெச்.யு.எல். பங்கு 4 சதவீதம் அளவுக்கு (மார்ச் 23) சரிந்திருக்கிறது. ஹெச்.யு.எல். நிறுவனம் 2020-ம் ஆண்டு ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் (பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள் உள்ளன) நிறுவனத்தை வாங்கியது நினைவுகூறத்தக்கது.