BUCKET PLAN |பக்கெட் பிளானில் சேமிக்க என்ன செய்ய வேண்டும்..?

குறுகிய கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய தேவை இல்லை. சேமித்து வைத்தாலே போதுமானது.
Bucket Plan
Bucket Plan Saving Plan
Published on

நம் சேமிப்பு தங்கு தடையில்லாமல் கடைசி வரை செல்ல உதவும் பக்கெட் பிளான் பற்றி இந்த கட்டுரையில் காண்போம். இந்த முயற்சியை தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய நிதி சம்பந்தப்பட்ட அடித்தள கட்டமைப்புகளான பட்ஜெட், கடன் மேலாண்மை, அவசரகால நிதி & காப்பீடு போன்றவற்றை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

அடித்தள கட்டமைப்புகளை செய்தவுடன் நாம் செய்ய வேண்டியது, அடைய வேண்டிய நிதி இலக்குகளை (financial goals) நிர்ணயம் செய்வது. நிதி இலக்குகளை எழுதும் போது குறுகிய கால, நடுத்தர கால & நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து எழுத வேண்டும். இரண்டு முக்கிய கேள்விகளை மனதில் வைத்து இந்த இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் .

  • இந்த இலக்கிற்கு எனக்கு எவ்வளவு பணம் தேவை?

  • எத்தனை ஆண்டுகள்/மாதங்களில் இந்த இலக்கை நாம் சந்திக்க நேரிடும்?

இவற்றை பற்றிய ஒரு சிறந்த கணக்கை பண்ணியவுடன் அவற்றை 3 பக்கெட்களில் நாம் அடைக்க வேண்டும். 

  • பக்கெட் A - 2 ஆண்டுகளுக்குள் உள்ள குறுகியகால இலக்குகள் 

  • பக்கெட் B - 3-7 ஆண்டுகள் வரை உள்ள நடுத்தரகால இலக்குகள் 

  • பக்கெட் C - 7 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நீண்டகால இலக்குகள் 

இவ்வாறு நாம் இலக்குகளை நிர்ணயம் செய்யும் போது குறுகிய கால இலக்குகளில் நாம் எதிர்பார்க்கும் செலவு சரியாக இருக்கும், அதுவே நடுத்தர & நீண்டகால இலக்குகளை கணக்கிடும் போது பணவீக்கத்தை கணக்கில் வைத்து தொகையை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு குழந்தையின் மேற்படிப்பிற்கு 10 ஆண்டுகள் உள்ளதாக வைத்துக்கொள்வோம். ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க இப்போது ரூ. 25,00,000 ஆவதாக வைத்து கொள்வோம். இந்தியாவின் பணவீக்கத்தை (6%) மனதில் வைத்து 10 ஆண்டுகளில் தோராயமாக வரும் தொகையை (ரூ. 44,77,119) இலக்காக நிர்ணயிக்க வேண்டும்.

பின்வரும் அட்டவணையில் உள்ளது போல் நாம் நம் இலக்குகளை அந்தந்த பக்கெட்களுக்குள் அடைத்து சேமிக்க/முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதில் நடுத்தர & நீண்ட கால இலக்குகளுக்கு நான் பணவீக்கத்தை 6% ஆக வைத்து எதிர்கால தொகையை தோராயமாக   நிர்ணயித்து உள்ளேன். இதை உங்களின் lifestyle தகுந்தார் போல் 1-2% அதிகம் வைத்து கணக்கிட்டுக்கொள்ளலாம்.

சரி இலக்கை அடைய எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம்?

குறுகிய கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய தேவை இல்லை. சேமித்து வைத்தாலே போதுமானது. நடுத்தர & நீண்ட கால இலக்குகளுக்கு நாம் முதலீடு செய்தாக வேண்டும்.

மேலே கூறியவற்றை செய்யும் போது உங்களின் ரிஸ்க் அளவை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும். 20 வயதில் உள்ள திருமணம் ஆகாதவரின் ரிஸ்க் எடுக்கும் அளவும், பெற்றோர் & குழந்தைகள் உட்பட பலர் குடும்பத்தில் ஒருவரின் வருமானத்தை நம்பி இருப்பவரின் ரிஸ்க் எடுக்கும் அளவும் ஒன்றல்ல.

ஒருவேளை உங்களுக்கு போதுமான அளவு அனுபவம் & திறமை இல்லை என்றால் நல்ல முதலீட்டு ஆலோசகரை அணுகலாம். உடல்நலம் காக்க நாமே மருந்து எடுத்து கொள்வதை விட மருத்துவரை நாடுவது நல்லது தானே, அதுபோல முதலீட்டை சரி செய்ய நல்ல முதலீட்டு ஆலோசகரை அணுகலாம்.

நினைவில் கொள்ளுங்கள், எதுவும் 100% சரியான தீர்வு என்று கிடையாது, முதலில் இவ்வாறு பக்கெட் பிளான் செய்யுங்கள், சிரமம் வரும்போது ஆராய்ந்து முதலீட்டை சிறிது தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். அப்புறமென்ன, பிரித்து முதலீடு செய்யுங்கள் & இலக்கை தடையில்லாமல் அடையுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com