மைக்ரோ ஃபைனான்ஸ்: எளியவர்களைக் குறிவைக்கும் நூதன மோசடிகள் - பாதுகாப்பாக அணுகுவது எப்படி?

மைக்ரோ ஃபைனான்ஸ்: எளியவர்களைக் குறிவைக்கும் நூதன மோசடிகள் - பாதுகாப்பாக அணுகுவது எப்படி?
மைக்ரோ ஃபைனான்ஸ்: எளியவர்களைக் குறிவைக்கும் நூதன மோசடிகள் - பாதுகாப்பாக அணுகுவது எப்படி?
Published on

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலையில், மக்களின் அன்றாட பொருளாதாரமே ஆட்டம் கண்டது. அந்த நேரத்தில் வேலை இழந்த பலரும் நாடியது நுண்கடன்கள் எனப்படும் சிறு சிறு கடன் நிறுவனங்களைத்தான். அதாவது, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்.

வேலை இழந்து, வருமானத்தை இழந்த பலரையும் குறிவைத்து இறங்கிய நுண்கடன் நிறுவனங்கள், அவர்களுக்கு கடன்களை அளித்து தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக சமீப காலத்தில் நடைபெற்று வரும் பல நிகழ்வுகள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் நுண்கடன் நிறுவனங்கள் காட்டும் கடுமையான கெடுபிடிகள், நெருக்கடிகளால், கடன் வாங்கியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை சம்பவங்கள் வரை நிகழ்ந்துள்ளன.

'கடனை வசூலிக்கிறேன்' என அடாவடியாக இறங்கும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் குறித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வழக்குகள் பதியப்படுகின்றன. பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாக புகார்களும் வருகின்றன.

சமீபத்தில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு நுண்கடன் நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்றது. போலீஸ் விசாரணையில், அனுமதி பெறாமலேயே அந்தக் கடன் நிறுவனம் இயங்கி வந்தது என்றும், செயலி மூலம் கடன் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி இழுப்பதும் தெரிய வந்தது. அதைவிடவும் அதிர்ச்சியாக, அந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சில சீனர்களை போலீஸ் கொத்தாக கைது செய்தது.

சீனாவில் இருந்து இங்கு வந்து, அதிக வட்டிக்கு பணத்தை கொடுக்கல் வாங்கல்போல செய்து வந்துள்ளனர். அதன் பின்னரே 'ஆப்ஸ்' மூலம் கடன் கொடுப்பதற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. எனவே, மக்கள் இந்தச் சூழலில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

மக்களின் நிதி நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு, மோசடியான முறையில் நுண்கடன் வலை விரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என மத்திய அரசின் கூட்டுறவு வங்கியின்கீழ் இயங்கும் மைக்ரோஃபைனான்ஸ் வங்கியான 'ரெப்கோ' (REPCO) நுண்கடன் வங்கியின் நிர்வாக இயக்குநர் இஸபெல்லாவிடம் கேட்டோம். அவர் அளித்த விரிவான விளக்கம்:

"கடன் கிடைக்கிறது என எல்லாவற்றுக்கும் வாங்கிக் கொண்டிருக்கக் கூடாது. எதற்காக கடன் வாங்குகிறோம். அதை திருப்பி செலுத்துவதற்கான திட்டம் என்ன, வட்டி விகிதம் என்ன என்பதை புரிந்துகொண்டு கடன் வாங்கினால் எந்த சிக்கலும் இருக்காது.

சிறுகடைகள், தினசரி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அன்றாட முதலீடு தேவையாக இருக்கும். அவர்களும் ஒரு முறைக்குள் இருந்து வாங்க வேண்டும். என்ன தேவைக்கு என கடன் வாங்குகிறோமோ, அதை நிறைவேற்றுவதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு கடனை திருப்பி செலுத்தினால்தான், அடுத்தடுத்து தேவைக்கு கடன் கிடைக்கும்.

முக்கியமாக, எந்த நிறுவனத்தில் கடன் வாங்குவது என்பதிலும் மக்களுக்கு தெளிவு வேண்டும். பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் நுண்கடனுக்கு என தனி பிரிவுகளை வைத்துள்ளன. அவற்றை நாடுவதுதான் சிறப்பாக முடிவாக இருக்கும்.

ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பலவும் கிராமப்புற நுண்கடன் சேவைகளை அளிக்கின்றன. அவற்றை நாடுவதன் மூலம், சிறு தொழில்களுக்கான நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், ஆப்ஸ் மூலம் கடன் அளிக்கிறோம் என முறையற்ற நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

('ரெப்கோ' நுண்கடன் வங்கியின் நிர்வாக இயக்குநர் இஸபெல்லா)

கிராமப்புற மக்கள் மற்றும் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் அவசர நிதி தேவைகளை நுண்கடன்கள் நிவர்த்தி செய்கின்றன். எனவே, நுண்கடன்கள் வளர்ச்சி ஆபத்து என புரிந்துகொள்ளக் கூடாது. நுண்கடன்கள்தான் மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை உறுதி செய்கிறது. தொழில்களை தொய்வில்லாமல் நடத்த நம்பிக்கை அளிக்கிறது.

எங்களது நுண்கடன் வங்கி மூலம் இதுவரை 4 ஆயிரம் கோடி ரூபாய் அளித்துள்ளோம். தமிழகம் முழுவதும் சுமார் 12 லட்சம் பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர்.

எனவே, நுண்கடன்கள் ஆபத்து என புரிந்துகொள்வதை விட, அவசியமானது என புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், யாருக்கு என்பதிலும், அதை வாங்கிய பின்னர் எப்படி கையாளப்போகிறோம் என்பதிலும் தெளிவிருந்தால் எந்த அச்சமும் தேவையில்லை" என்றார்.

இதனிடையே, அனுமதி பெற்ற மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்த வழிகாட்டல் நெறிமுறைகளை கடுமையாக்கும் பணிகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.

கடன் இல்லாத மனிதர்களை காண்பது அரிது என்றாகிவிட்ட காலத்தில், அதை கவனித்து வாங்க வேண்டும் என்கிற எச்சரிக்கையை தவிர்க்க முடியாது.

- ஷாலினி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com