கொரோனா 2-ம் அலை தீவிரம்: சில சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற ஹெச்சிஎல் டெக் முடிவு

கொரோனா 2-ம் அலை தீவிரம்: சில சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற ஹெச்சிஎல் டெக் முடிவு
கொரோனா 2-ம் அலை தீவிரம்: சில சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற ஹெச்சிஎல் டெக் முடிவு
Published on

தற்போது கொரோனா பரவல் அதிவேகம் எடுத்திருக்கும் நிலையில், தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.டி உள்ளிட்ட சில துறைகளில் வீட்டில் இருந்து பணியாற்றுவது வழக்கமாக மாறியிருக்கிறது. எனினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) நிறுவனம் சில வாடிக்கையாளர் சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது அவசியம் என்பதால், இந்த நடவடிக்கையை ஹெச்சிஎல் எடுத்திருப்பதாக தெரிகிறது. தவிர, வாடிக்கையாளர்களிடம் உரையாடுவதுதான் முக்கியமான பணி என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹெச்சிஎல் ஒரு சர்வதேச நிறுவனம். மொத்த பணியாளர்களில் 30 சதவீதத்தினர் வெளிநாடுகளில் உள்ளனர். வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுகொள்ளும் வேகம் அதிகமாக இருப்பதால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் சற்று கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தியச் சூழலை நன்றாக புரிந்துவைத்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் நிலைமை மேம்படும் என ஹெச்சிஎல் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

"ஒவ்வொரு அலுவலகத்திலும் தடுப்பூசி முகாம் அமைத்திருக்கிறோம். அத்துடன், பணியாளர்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். தேவையைப் பொறுத்து, நடப்பு நிதி ஆண்டில் 20,000 பணியாளர்களை பணியமர்த்தவும் ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிலையில் சந்தை மதிப்பு அடிப்படையில் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமாக இருந்த ஹெச்சிஎல் நான்காம் இடத்துக்கு சரிந்திருக்கிறது. மூன்றாவது பெரிய நிறுவனமாக விப்ரோ உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com