ஜிஎஸ்டியின் 28% வரியால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மின்விசிறியின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மின் விசிறிகளுக்கு 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டியில் அது 28 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மின் விசிறிக்கு ஏர் கண்டிஷனர் அளவுக்கு வரி விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது என உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே போல் ஜிஎஸ்டி வரி முறையால் தமிழகத்தில் 8 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இது குறித்து பேசிய இச்சம்மேளனத்தின் தலைவர் மதிவாணன், ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். இதனால் நாட்டில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எனவே அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான 17ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மேலும் பல பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.