அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வருகின்றனர். ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் 328 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ளது.
ஜிஎஸ்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் விளம்பரங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது. இதுவரை ஜிஎஸ்டி தொடர்பான விளம்பரங்களுக்கு அரசு 132 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதில் அச்சு ஊடகத்தில் ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களுக்கு 126 கோடியே 93 லட்சம் ரூபாயும், மின்னணு ஊடகங்களில் செலவு செய்யப்படவில்லை என்றும் மற்ற வழிகளில் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு 5 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 கோடி ஜிஎஸ்டி வசூலானது. அதன்படி 5 மாதங்களுக்குப் பிறகு அக்டோபரில் சரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை கால விற்பனை அதிகரிப்பு ஆகியவையே ஜிஎஸ்டி வசூல் உயரக் காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.