உணவகங்களின் ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரிமுறைக்கு பிறகு, நாட்டின் பொருளாதாரத்திலும், பொருட்களின் விலைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்பது தோல்வியடைந்த வரிமுறை என்றும், இதில் சிறு வியாபரிகளும், பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஜிஎஸ்டியால் இந்தியாவில் நிலையான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். குறிப்பாக ஜிஎஸ்டியில் வரி அமல்படுத்தப்பட்ட போது, உணவங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வியாபாரம் குறைந்துவிட்டதாக உணவங்களின் உரிமையாளர்களும், உணவுகளின் விலை உயர்ந்துவிட்டதாக சாமானியர்களும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உணவங்களிலும் ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து மத்திய நிதித்துறை பரிசீலித்து வருகிறது. இதன்படி ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் உணவகங்களுக்கு 5 சதவிகிதமும், அதற்கு மேல் வருமானம் ஈட்டும் உணவகங்களுக்கு 12 சதவிகிதமும் வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உணவகங்களில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.