சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு 'பசுமை வரி' விதிப்பதற்கான திட்ட முன்வடிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, இந்தத் திட்டமுன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
> எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில் சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் பெறலாம்.
> தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.
> பொது போக்குவரத்து வாகனங்களான நகர பேருந்துகள் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் பசுமை வரி விதிக்கப்படும்.
> மின்சாரம், மாற்று எரிவாயுகளில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
> பசுமை வரியின் மூலம் பெறப்படும் வருவாய், மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்.
அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இயங்கும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இது 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.