இந்திய தயாரிப்புப் பொருட்கள் வாங்குவதை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ’’இந்த வழக்கில் என்னுடைய தரப்பு முடிந்துவிட்டது. ஆனால் நான் எனக்குள் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நமது சந்தைகள் சீனப் பொருட்களால் மூழ்கியிருக்கிறது. பொதுமக்கள் உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் மொபைல் போன் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்திய பிராண்டைக் கூட நான் பார்க்கமுடியவில்லை. ஆனால் சீனப் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மக்களுக்குச் சொல்வதில் எந்த பயனுமில்லை. இந்திய தொழிலதிபர்கள் சீனப் பொருட்களுக்கு மாற்றாக இந்தியப் பொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும். ஆனால் தரத்தைக் குறைக்கக்கூடாது. அதேநேரத்தில் பொருட்களின் நிர்ணய விலையையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.