சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கான சிறுசேமிப்பு வட்டி அரை சதவிகிதம் வரை குறைக்கப்படலாம் என டெல்லியில் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் முக்கால் சதவிகிதம் வரை குறைத்தது. ரெப்போ விகிதம் இப்போது 5.75 சதவிகிதமாக உள்ள நிலையில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைக்க அரசிடம் வங்கிகள், தபால் நிலையங்கள் கோரிக்கை விடுத்தன.
அதன்படி, வட்டிக் குறைப்புக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டுக்கு வட்டிக் குறைப்பு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வங்கி, தபால் நிலைய சேமிப்புக் கணக்குக்கு இப்போது 4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. பிக்சட் டெபாசிட் வட்டி ஓராண்டுக்கு 7 முதல் 3 ஆண்டு வரை 8 சதவிகிதமாக உள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரம், பிஎஃப், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றிலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இவை அரை சதவிகிதம் வரை குறைக்கப்பட்டால், சிறுசேமிப்பு வட்டியை நம்பியுள்ள ஓய்வுபெற்றோர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.